SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் படிவங்களை திருப்பி ஒப்படைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது தேர்தல் ஆணையம். அதன்படி, வரும் 14-ம் தேதி கடைசி நாளாகும்.

தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களில், எஸ்ஐஆர் பணிகளுக்கான படிவங்களை திருப்பி ஒப்படைப்பதற்கான கால அவகாசம் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்கான படிவங்களை திருப்பி வழங்க, ஏற்கனவே டிசம்பர் 11-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பர் 14-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தீவிரமாக நடைபெற்றுவரும் எஸ்ஐஆர் பணிகள்
நாடு முழுவதும் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என, பீகார் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்றபோதே தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், எஸ்ஐஆர் பணிகளை தொடங்கி நடத்தி வருகிறது தேர்தல் ஆணையம்.
தமிழ்நாடு சட்டசபைக்கான தேர்தல் வரும் 2026-ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தமிழ்நாட்டில் வீடு, வீடாக விண்ணப்ப படிவங்களை, வாக்கு மைய நிலை அலுவலர்கள் வழங்கினர்.
ஏற்கனவே டிச.4 என அறிவிக்கப்பட்ட கடைசி தேதி
இந்த விண்ணப்ப படிவங்களை நிரப்பி திருப்பி அளிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4-ம் தேதி என அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், குறுகிய காலத்திற்குள் இந்த பணியை செய்து முடிப்பது சற்று கடினமானது என தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், எஸ்ஐஆர் நடைமுறைகள் 4-ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அதன் கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை திருப்பி ஒப்படைக்க, டிசம்பர் 11-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. எஸ்ஐஆர் பணிகளுக்கு, தமிழ்நாடு மற்றும் கேரளா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இதன்பின்னர், டிசம்பர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் இறுதிப் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்
இந்நிலையில், தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளுக்கான படிவங்களை திருப்பி ஒப்படைப்பதற்கான காலஅவகாசம் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்கான படிவங்களை திருப்பி வழங்க, டிசம்பர் 14-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்பிறகு, வரும் 19-ம் தேதி, தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். சத்தீஷ்கார், அந்தமான் நிகோபர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் 18-ம் தேதி வரை படிவங்கள் பெறப்பட்டு, 23-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். உத்தர பிரதேசத்தில் 26-ம் தேதி வரை படிவங்கள் பெறப்பட்டு, 31-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















