திறந்த ஒரே நாளில் உயிர்களை காவு வாங்கிய மையம்; ஆக்சிஜன் சப்ளை பாதிப்பால் 9 பேர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு!
போதிய மருத்துவர்களும், மருந்தும் இல்லாத நிலையில் உதவிக்கு உடன் தங்கியிருந்த உறவினர்கள், துடித்துக் கொண்டிருந்த தங்கள் உறவுகளை எப்படி மீட்பது என புரியாமல் தவித்தனர். ஆக்சிஜன் இருந்தும் முறையான வினியோகம் இல்லாமல் அடுத்தடுத்து 9 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
காரைக்குடியில் அவசரமாக திறக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட பைப் லையன் கோளாறால் ஆக்சிஜன் சீராக கிடைக்காமல் நோயாளிகள் சிலர் இறந்ததாக தகவல் வெளியானது. இதை் தொடர்ந்து அவசர அவசரமாக வேறு இடங்களுக்கு நோயாளிகள் மாற்றம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று முன்தினம் புதிதாக கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டது . மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றிலிருந்து சிகிச்சை பெறும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், இந்த மையத்தை திறந்து வைத்தார். அன்றைய தினமே குறிப்பிட்ட அளவு நோயாளிகள் அங்கு அனுமதிக்கப்பட்டனர்.
நிரம்பி வழிந்த சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் காத்திருந்த நோயாளிகளுக்கு இது பெரிய அளவில் நிம்மதி அளிப்பதாக இருந்தது. இந்நிலையில் ஒரே நாளில் புதிய மையத்தின் லட்சணம் வெளியே தெரிய வந்துள்ளது. மையத்தில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் செல்லும் பைப் லயனில் திடீர் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சீரான ஆக்சிஜன் பெற முடியாமல் திடீரென நோயாளிகள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர்.
போதிய மருத்துவர்களும், மருந்தும் இல்லாத நிலையில் உதவிக்கு உடன் தங்கியிருந்த உறவினர்கள், துடித்துக் கொண்டிருந்த தங்கள் உறவுகளை எப்படி மீட்பது என புரியாமல் தவித்தனர். ஆக்சிஜன் இருந்தும் அதை முறையாக வினியோகம் செய்யாத காரணமாக அடுத்தடுத்து 9 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக அங்கு வந்த மாவட்டஆட்சியர் மதுசூதனன் ரெட்டி, அங்கிருந்த நோயாளிகளை அவர்கள் முன்பு சிகிச்சை பெற்ற சிவகங்கை, அமராவதி புதூர் உள்ளிட்ட சிகிச்சை மையங்களுக்கு மாற்றி அனுப்ப ஏற்பாடு செய்தார்.
பணிகள் முடிவடையாத கட்டடத்தில் அமைச்சரின் விருப்பத்திற்காக அவசர கோலத்தில் சிகிச்சை மையம் திறக்கப்பட்டதே குளறுபடிக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர். உறவினர் ஒருவர் கூறுகையில், ‛‛இதற்கு முன் அரசு மையத்தில் தான் சிகிச்சை பெற்றோம். அங்கு எந்த பிரச்னையும் இல்லை. புதிய மையம் என இங்கு அழைத்து வந்து ஒரு நாள் தான் ஆகிறது. டாக்டர்கள் இல்லை, மருந்து இல்லை, மருந்து தருவதற்கு ஆளில்லை. யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை. திடீரென ஒரே நேரத்தில் நோயாளிகள் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அங்கிருந்த பணியாளர்களிடம் கேட்ட போது, ஆக்சிஜன் சப்ளை ஆகவில்லை என்றார்கள். ஆக்சிஜன் படுக்கைக்கு , அதுவும் புதிய படுக்கைக்கு எப்படி இணைப்பு கோளாறு ஏற்படும் எனத் தெரியவில்லை. அதை கூட சரிபார்க்காமல் எப்படி நோயாளிகளை அனுமதித்தார்கள்,’’ என வேதனை தெரிவித்தார்.
மற்றொரு நோயாளியின் உறவினர் கூறும் போது, ‛‛கலெக்டர் வரும் வரை எந்த அதிகாரியும் வரவில்லை. அவர் வந்த பிறகு தான் நோயாளிகள் அடுத்தடுத்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். நிறைய பேர் மூச்சு திணறி இறந்து போயினர். அவர்கள் நிலை என்னவென்று தெரியவில்லை,’’ என்றார்.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி, ‛‛கடுமையாக கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தான். 3 பேர் இறந்ததாக தான் தகவல் கிடைத்துள்ளது. 9 பேர், 10 பேர் என்றெல்லாம் வதந்தி பரப்ப வேண்டாம், போதிய அளவு ஆக்சிஜன் உள்ளது,’’ என்றார். ஒவ்வொரு முறை ஆக்சிஜன் பற்றாக்குறையில் நோயாளிகள் இறக்கும் போதும் அரசு தரப்பில் இது போன்ற விளக்கமே தரப்படுகிறது. ஆனால் இந்த முறை ஆக்சிஜன் இருந்தும், பைப் லைன் கோளாறு காரணமாக வினியோகம் தடைபட்டுள்ளது. உண்மையில் நடந்தது என்ன? புதிதாக திறந்த மையத்தில் அட்மிஷன் போட்ட கையோடு அதை கண்டுகொள்ளாமல் இருந்த மருத்துவ துறையின் அலட்சியத்தை யார் கேட்பது? எஞ்சியிருப்பவர்களையாவது காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.