கடலை மிட்டாய் திருடியதாக கூறி மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பிரம்படி - 4 பேர் மீது வழக்குப்பதிவு
’’ஊர்க்காரர்கள் முன்னிலையில் பிரம்பால் தாக்கி காயப்படுத்தியதுடன் சிறுவனை உளவியல் ரீதியாக மேலும் பாதிப்படையச் செய்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது’’
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மாரியூர் கிராமத்தில் பெட்டிக் கடையில் கடலை மிட்டாய் திருடியதாக கூறி அக்கிராம பெரியோர்கள் ஊர்க்காரர்கள் முன்னிலையில் பள்ளி மாணவனை பிரம்பால் சரமாரியாக அடித்த வீடியோ தற்போது வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாரியூர் கிராமத்தை சேர்ந்த நதியாபானு என்பவரின் மூத்த மகன் தாஜுதீன் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவனான இவன் சிறிய அளவில் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாரியூர் கிராமத்தில் உள்ள ஒரு கடையில் பாட்டிலில் வைத்திருந்த மிட்டாயை திருடியதாக கூறி அக்கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள் அனைவரும் ஒன்றுகூடி தரையில் அமர்ந்து அக்கிராமத்தின் ஜமாத்தார்கள் முன்னிலையில் திருடியதாக கூறப்படும் பள்ளி மாணவனையும் அழைத்து வந்து பிரம்பால் ஒருவர் தாக்கிய பின் மற்றொருவரும் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தாக்குதலில் பள்ளி மாணவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாணவனின் தாயார் நதியாபானு சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சாயல்குடி போலீசார் மாரியூரை சேர்ந்த முசாபர் அடிமை , முத்து முகம்மது , செய்யது அபுதாஹிர் , அமீர் ஆகிய நால்வர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், மாரியூரை சேர்ந்த புருக்கான்- நதியா பானு தம்பதியின் மூத்த மகன், 11-ம் வகுப்பு படிக்கிறார். இவருக்கு சிறிய அளவு மனநல பாதிப்புள்ளதாக குடும்பத்தினர் கூறுகிறார்கள்.இளம் சிறாரான அவர்களின் மகன் நண்பருடன் சேர்ந்து டி. மாரியூரில் அப்துல் ரகுமான் என்பவர் கடையில் சாக்லேட் திருடியதாகவும், அதை கடைக்காரர் ஜமாத் தலைவரிடம் புகார் செய்ய, ஜமாத்தை சேர்ந்த முத்து முகம்மது, முஜாபர் அடிமை, அமீர், செய்யது அபுதாகீர் ஆகியோர் கடந்த கடந்த மாதம் 25 ஆம் தேதி அச்சிறுவனை அவரது தந்தையுடன் சேர்த்துக்கொண்டு அசிங்கமாக பேசி, கம்பால் அடித்தும் தாக்கியுள்ளனர். இது சம்பந்தமாக சிறுவனின் தாயார் கடந்த மாதம் 30 ஆம் தேதி மீது காவல் நிலையத்தில் சிறுவனை அசிங்கமாக பேசி, தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது புகார் கொடுத்துள்ளார். விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.
சிறுவன் அறியாத வகையில் தெரியாமல் தவறு செய்திருந்தாலும் அதை வீட்டாரிடம் தெரிவித்து, நல்லமுறையில் அவனுக்கு புத்திமதி கூறுவதை விடுத்து ஊர்க்காரர்கள் முன்னிலையில் பிரம்பால் தாக்கி காயப்படுத்தியதுடன் சிறுவனை உளவியல் ரீதியாக மேலும் பாதிப்படையச் செய்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.