West Bengal Vs EC: SIR நடவடிக்கை; மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; தேர்தல் ஆணையம் அதிரடி
மேற்கு வங்கத்தில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 58 லட்சம் வாக்காளர்களை அதிரடியாக நீக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அங்கு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், அந்த பணிகளை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, டிசம்பர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேற்கு வங்கம், ராஜஸ்தான், கோவா, புதுச்சேரி, லட்சத்தீவு உள்ளிட்ட இடங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மேற்கு வங்கத்தில் அதிரடியாக 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR பணிகள்
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்(SIR) பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவருகிறது. அதில் முதற்கட்டமாக சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத் தீவுகள், புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் SIR பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நவம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கிய இந்த பணிகள், டிசம்பர் 4-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், மேற்கு வங்கம், ராஜஸ்தான், கோவா, புதுச்சேரி, லட்சத் தீவு உள்ளிட்ட இடங்களில் படிவங்களை நிரப்பிக் கொடுப்பதற்கான கால அவகாசம் கடந்த 11-ம் தேதி நிறைவு பெற்றது.
இதைத் தொடர்ந்து, டிசம்பர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டருந்த நிலையில், இன்று மேற்கு வங்கம், ராஜஸ்தான், கோவா, புதுச்சேரி, லட்சத் தீவு உள்ளிட்ட இடங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் அதிரடி நீக்கம்
மேற்கு வங்கத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் அதிரடியாக 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதில்,
- 24,18,699 வாக்காளர்கள் இறப்பு
- 19,93,087 வாக்காளர்கள் முகவரி மாற்றம்
- 12,01,462 வாக்காளர்களை கண்டுபிடிக்க முடியவில்லை
- 01,27,575 வாக்காளர்கள் போலி
என்று கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதோடு, பிற காரணங்களுக்காக என்று கூறி, 57,509 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் 85,000 பேர் நீக்கம்
இதேபோல், புதுச்சேரியிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனை, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான குலோத்துங்கன் வெளியிட்டார்.
அங்குள்ள 25 தொகுதிகளில் மொத்தம் 8.51 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். இந்நிலையில், தற்போது வரைவு வாக்காளர் பட்டியலில் 85,000 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தற்போது 7.66 லட்சம் வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளனர்.
மீண்டும் விண்ணப்பிக்கலாம்
தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், புதிய வாக்காளர்களாக தங்களை இணைத்துக் கொள்ளலாம். அதற்கான விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து பிஎல்ஓ-விடம் வழங்க வேண்டும்.
மேலும், ஆன்லைனிலும் புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத தகுதியுடைய வாக்காளர்கள் 2026 ஜனவரி 15-ம் தேதி வரை மீண்டும் விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. அந்த பட்டியலில் இடம்பெறும் வாக்காளர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும்.
தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.





















