மேற்கு வங்க சட்டசபை : 2016ம் ஆண்டு யார்? யாருக்கு? எத்தனை இடங்கள்?
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மிருக பலத்துடன் இருக்கும் பா.ஜ.க. நாடு முழுவதும் ஆட்சிக்கட்டிலில் அமர அனைத்து முயற்சிகளை கடந்த சில வருடங்களாகவே மேற்கொண்டு வருகிறது. தற்போதைய சூழலில், பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவரான சோனியாகாந்தி, ராகுல்காந்தியை விட சிம்ம சொப்பனமாக விளங்குபவர் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.
தென்னிந்தியாவில் தமிழகத்தைப் போல, கிழக்கு இந்தியாவில் பா.ஜ.க.விற்கு சவாலான மாநிலமாக விளங்குவது மேற்கு வங்கம். 1998-இல் திரிணாமுல் காங்கிரசை தொடங்கிய மம்தா பானர்ஜி தனது தீவிர பரப்புரையாலும், கள வியூகங்களாலும் மேற்கு வங்கத்தை அதுவரை ஆண்டுகொண்டிருந்த மார்க்சிஸ்டுகளிடம் இருந்து 2011-ஆம் ஆண்டு முதல்முறையாக கைப்பற்றினார். தனது சிறப்பான நிர்வாகத்திலும், மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையாலும் 2016-ஆம் ஆண்டு மீண்டும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.
அந்த தேர்தலில் மட்டும் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 184 இடங்களை கைப்பற்றியது. அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 42 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. சி.பி.எம். கட்சி 40 இடங்களை கைப்பற்றியது. இந்திய கம்யூனிஸ்டு 2 இடங்களை கைப்பற்றியது.
அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சி 11 இடங்களையும், புரட்சிகர சோசியலிச கட்சி 7 இடங்களையும், சமாஜ்வாதி, டெமாக்ரடிக் சோசியலிஸ்ட் கட்சி தலா 1 இடங்களையும், கோர்கா ஜன்முக்தி மோர்சா 3 இடங்களையும், சோசியலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா(கம்யூனிஸ்டு) 1 இடத்தையும், சுயேட்சைகள் 2 இடத்திலும் வெற்றி பெற்றனர். பா.ஜ.க. வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
2016 சட்டமன்ற தேர்தலில் 3 இடங்களில் கைப்பற்றிய பா.ஜ.க. இந்த 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸுக்கு கடும் போட்டியாக உருவெடுத்துள்ளது. 2016 முதல் 2021 வரையில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் தற்போது 15 இடங்களை பா.ஜ.க. தன் வசம் வைத்துள்ளது.
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தைப் போலவே, மேற்கு வங்கத்திலும் பா.ஜ.க. மண்ணை கவ்வும் என்று அரசியல் வல்லுநர்கள் சிலர் கருதினர். ஆனால், அவர்களின் கணிப்பை பொய்யாக்கிய பா.ஜ.க. மொத்தமுள்ள 42 மக்களவை தொகுதிகளில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இது மம்தாவிற்கே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால், 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 34 தொகுதிகளை தன் வசம் வைத்திருந்தது. 2021 சட்டசபை தேர்தலில் எத்தனை கட்சிகள் எத்தனை இடத்தை பிடிக்கப்போகின்றன என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தெரியவரும்.