Top 10 News: பள்ளியில் மீண்டும் முட்டை, புதியதாக 2,642 மருத்துவர்கள் நியமனம் - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

முதலமைச்சரின் பயணமும், பணி நியமனமும்
கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்றும், நாளையும் கள ஆய்வு மேற்கொள்கிறார். மஞ்சக்குப்பத்தில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதனிடையே, தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 2,642 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 26ம் தேதி வழங்க உள்ளார்.
"எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
“எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி. உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி! இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம். அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி” - உலக தாய்மொழி தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.
தங்கம் விலை சரிவு:
தங்கம் விலை சற்றே சரிந்து பொதுமக்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 64 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிராம் விலை 45 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திசை திருப்பும் பாஜக - ராகுல் காந்தி
"நாட்டில் பணவீக்கம் கணிசமாக உயர்ந்துவிட்டது. ஆனால், பாஜக அரசு பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. உண்மையான பிரச்னைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்ப முயன்று வருகிறது” -ராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்
மத்திய அமைச்சர் விளக்கம்
பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சிறப்பாகவே உள்ளது என மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி. இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.95 என வரலாறு காணாத அளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது குறித்த கேள்விக்கு இந்த பதில் அளித்துள்ளார்.
பள்ளியில் மீண்டும் முட்டை:
மகாராஷ்டிரா அரசுப் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தில் இடம்பெற்ற முட்டைக்கான நிதியை நிறுத்தும் முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார் அம்மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தாதாஜி பூஸ். வாரத்தில் ஒரு நாள் முட்டையும், கூடுதலாக வாழைப்பழங்களும் வழங்க முடிவு. மேலும், வருகிற பட்ஜெட்டில் இதற்கான நிதியை |₹50 கோடியில் இருந்து ₹100 கோடியாக உயர்த்தவும் திட்டம். வலதுசாரி அமைப்புகளின் எதிர்ப்பால் நிதி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது
கார் விபத்தில் சிக்கிய கங்குலி
இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி சென்ற கார் மேற்குவங்கத்தின் தாதுபூர் என்ற இடத்தில் விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக காரில் சென்ற யாருக்கும் எவ்வித காயமும் இல்லை! லாரி மீது மோதாமல் இருக்க கங்குலியின் கார் ஓட்டுநர் பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
FBI இயக்குனரான இந்திய வம்சாவளி
அமெரிக்க அரசின் உச்சபட்ச விசாரணை அமைப்பான FBI-யின் இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். செனட் சபையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், 51-49 என்ற வாக்கு வித்தியாசத்தில் ட்ரம்பின் முடிவு வெற்றி.
சாம்பியன்ஸ் ட்ராபி இன்றைய போட்டி
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியின் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்ரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. கராச்சியில் நடைபெறும் போட்டி இந்திய நேரப்படி, பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. குரூப் பி-யில் நடைபெறும் முதல் போட்டி இதுவாகும்.
நூலிழையில் தவறிய சாதனை - அக்சர் படேல் ஓபன் டாக்!
”ரோகித் ஷர்மா கையில் பந்து பட்டதும், நான் ஹாட்-ட்ரிக் விக்கெட் எடுத்து விட்டேன் என்றே நினைத்தேன். அதனை கொண்டாட தயாரானபோது, பந்து கை நழுவிபோனது தெரியவந்தது. அப்போது |இதெல்லாம் நடப்பது இயல்புதான் என்று தோன்றியது!” - வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஹாட்-ட்ரிக்கை தவறவிட்டது குறித்து இந்திய வீரர் அக்சர் படேல் பேச்சு. சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இதுவரை எந்த இந்தியரும் ஹாட்-ட்ரிக் நிகழ்த்தியதில்லை