காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்
கொரோனா நோய்க்கான துரித பரிசோதனையை வீட்டிலேயே செய்வது பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது என்பன உள்ளிட்ட முக்கியச் செய்திகளின் தலைப்பு இது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய அரசியல் சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
1. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
2. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,875 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 365ஆக உள்ளது.
3. தமிழ்நாட்டில் 18-44 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்க இருக்கிறது. மே 1 முதலே தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் கிடைத்துவந்த நிலையில் தற்போது அரசே தனது இலவசத் தடுப்பூசி திட்டத்தின் கீழ் 18-44 வயதினருக்குமான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இன்று தொடங்குகிறது.
4. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ஏற்கனவே எப்சிஆர்ஏ கணக்கு வைத்திருப்பவர்கள், புதுதில்லி சன்சாத் மார்க் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் பிரதான கிளையில் வரும் ஜூன் 30ம் தேதி வரை எப்சிஆர்ஏ கணக்கு தொடங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்பின் புதுதில்லி பிரதான கிளையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் எப்சிஆர்ஏ கணக்கு தவிர, வேறு எந்த கணக்கிலும், வெளிநாட்டு நன்கொடை பெற தகுதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 20.8 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இது நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் மிக அதிக அளவாகும். நாட்டில் இதுவரை 32 கோடிக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
6. கொரோனா நோய்க்கான துரித ஆன்டிஜன் பரிசோதனையை வீட்டிலேயே செய்வது பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழு வெளியிட்டது.
7. கர்ப்பிணி பெண்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
8. கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மூன்று மாதத்திற்கு பிறகு தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
9. 12ம் வகுப்பு வாரியத் தேர்வுக்கு மாணவர்களில் தயார்படுத்தும் வகையில் ஆன்லைன் அலகுத்தேர்வுகள் (unit tests) தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
10. வாட்ஸ் ஆப்-இல் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கையை (privacy policy) திரும்ப பெறக்கோரி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு நோடீஸ் அனுப்பியுள்ளது.
இன்னும் இது போன்ற செய்திகளை சுருக்கமாகவும், தெளிவாகவும் அறிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் www.abpnadu.com