Rahul Gandhi Defamation Case: மோடி குறித்து அவதூறு பேச்சு.. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை...!
2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ற குடும்ப பெயர் பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ற குடும்ப பெயர் பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னர் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
கர்நாடகாவின் கோலாரில் நடந்த பிரசாரத்தில் சர்ச்சையாக பேசிய புகாரில் ராகுலுக்கு எதிராக சூரத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ராகுல்காந்தி தரப்பில் ஜாமின் கோரப்பட்டது.
தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. மேலும், 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு அனுமதியும் வழங்கியது. ரூ. 15,000 பிணைத்தொகை செலுத்தி ராகுல் காந்தி ஜாமீன் பெற நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
நீதிமன்ற விசாரணையின்போது, தனது எண்ணம் தவறில்லை எனவும் தனக்கு குறைந்த தண்டனை வழங்க வேண்டும் எனவும் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து விசாரணையின் போது அவர் கூறியதற்கு மன்னிப்பு கேட்கவும் மறுத்துவிட்டார்.
நடந்தது என்ன?
முன்னதாக, 2019 லோக்சபா தேர்தலில், கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த பேரணியில், அனைத்து திருடர்களும் மோடியை ஏன் குடும்பப் பெயராக வைத்துள்ளனர் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பாஜக எம்எல்ஏவும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, இந்தக் கருத்து தொடர்பாக ராகுல்காந்தி மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்து ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் இழிவுபடுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.
இருதரப்பு வழக்கறிஞர்களும் கூறியது என்ன?
பூர்ணேஷ் மோடியின் வழக்கறிஞர் வாதிடுகையில், ராகுல் காந்தி பேரணியில் பேசிய சிடியை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதற்கு ராகுல் காந்தியின் வழக்கறிஞர், CrPCயின் 202வது பிரிவின் கீழ் உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படாததால், நடவடிக்கைகள் ஆரம்பத்திலிருந்தே குறையாகவே உள்ளது என்று வாதிட்டார்.
மேலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினராக பிரதமர் நரேந்திர மோடிதான் புகார் அளித்திருக்க வேண்டும், பூர்ணேஷ் மோடி அல்ல என்றும் அவர் வாதிட்டார்.