PM Modi; பிரதமர் மோடியை பிரமிக்க வைத்த 3 போர் கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
மும்பையில், 3 போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி, அவை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது பெருமைக்குரியது என தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் உள்ள மும்பை கடற்படை கட்டும் தளத்திலிருந்து, 3 நவீன கடற்படை போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி, பின்னர் பேசிய அவர், 3 கப்பல்களும் இந்தியாவிலேயே தயரிக்கப்பட்டது பெரிமைக்குரிய விஷயம் என தெரிவித்தார்.
ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் வக்சீர் போர்க்கப்பல்கள்
இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பை பறைசாற்றும் வகையில், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் வக்சீர் ஆகிய போர்க்கப்பல்கள் இன்று(15.01.25) நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.
இதில், ஸ்டெல்த் திட்டத்தின் முதல் கப்பலான ஐஎன்எஸ் நீலகிரி, இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல், அடுத்த தலைமுறை போர்க்கப்பல்களில் முக்கியமான ஒன்றாகும்.
உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன வசதிகள் கொண்ட கப்பலில் ஒன்றாக ஐஎன்எஸ் சூரத் திகழும். வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான் திட்டத்தின் கீழ், 75 சதவீதம் உள்நாட்டு பங்களிப்புடன் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அதிநவீன ஆயுத சென்சார் மற்றும் மேம்பட்ட நெட்வொர்க் திறன்களை கொண்டது.
ஸ்கார்பீன் திட்டத்தின் ஆறாவது மற்றும் கடைசி கப்பலான ஐஎன்எஸ் வக்சீர், இந்தியாவின் நீர்மூழ்கி கப்பல் கட்டுமானத்தின் நிபுணத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நவீன நீர்மூழ்கிக் கப்பல், பிரான்ஸ் கடற்படையுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன போர்க்கப்பல்களை, மும்பை கடற்படை கட்டுமான தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. பின்னர் பேசிய அவர், இந்த கப்பல்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது பெருமைக்குரிய விஷயம் என தெரிவித்தார். மேலும், இந்திய பெருங்கடல் பகுதியில், எந்த அச்சுறுத்தலுக்கும் முதல் பதிலளிப்பாளராக இந்தியா உருவெடுத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். அதோடு, சமீப காலத்தில், இப்பகுதியில், நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளதோடு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தக சரக்குகளை காப்பாற்றியுள்ள இந்திய கடற்படை மீது உலகளவில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், இந்தியா, உலகின் முக்கிய கடல்சார் வல்லரசாக வளர்ந்துவருவதாகவும், ராணுவ தினத்தில், தேசத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் தனது மரியாதையை செலுத்துவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க: Australian Open; அனல் பறக்கும் ஆஸ்திரேலியன் ஓபன்; 3-வது சுற்றுக்கு முன்னேறிய வீரர், வீராங்கனைகள் யார்?