Australian Open; அனல் பறக்கும் ஆஸ்திரேலியன் ஓபன்; 3-வது சுற்றுக்கு முன்னேறிய வீரர், வீராங்கனைகள் யார்?
அனல் பறக்க நடைபெற்றும் வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகளில், அல்காரஸ், ஜோகோவிச், சபலென்கா ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முக்கியமான ஒன்றாக விளங்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில், முன்னணி வீரர், வீராங்கனைகள் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அவர்கள் யார் யாரென்று பார்க்கலாம்.
அசால்ட்டாக அடித்த அல்காரஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்போர்னில் நடைபெற்று வருகின்றன. இதில், இன்று(15.01.25) இரண்டாம் சுற்று போட்டிகள் அனல் பறக்க நடைபெறுகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-ம் சுற்று போட்டி ஒன்றில், உலகின் 3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் அல்காரஸ், ஜப்பானின் நிஷியோகாவுடன் மோதினார். இந்த பேட்டியில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ், 6-0, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றியை பதிவு செய்து, 3-ம் சுற்றுக்கு முன்னேறினார். இதுவரை, மற்ற 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வென்றுள்ள அல்காரஸ், ஆஸ்திரேலிய ஓபனில் வென்றதில்லை. இந்த முறை வெற்றி பெற்றால், இளம் வயதில் அனைத்துவித கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் வென்ற முதல் வீரராக அல்காரஸ் விளங்குவார்.
மற்றொரு போட்டியில், உலகின் 7-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், போர்ச்சுக்கல் வீரரான ஃபரியாவுடன் மோதினார். அனல் பறக்க நடந்த இந்த ஆட்டத்தில், முதல் செட்டை ஜோகோவிச் எளிதாக வென்றாலும், சுதாரித்து ஆடிய ஃபரியாவிடம் இரண்டாவது செட்டை இழந்தார். பின்னர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச், 6-1, 7-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
3-வது சுற்றுக்கு முன்னேறிய சபலென்கா
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-ம் சுற்று போட்டி ஒன்றில், உலகின் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் சபலென்கா, ஸ்பெயின் வீராங்கனையான ஜெசிக்கா பவுசாசுடன் மோதினார். இதில், முதல் செட்டை எளிதாக கைப்பற்றிய சபலென்காவிற்கு, இரண்டாவது செட்டின்போது சற்று நெருக்கடி கொடுத்தார் ஜெசிக்கா. எனினும், சுதாரித்து ஆடிய சபலென்கா, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.