"மணிப்பூர் மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்": ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற ரோஷிவினா உருக்கம்
வுஷூ போட்டியின் 60 கிலோ எடை மகளிர் பிரிவில் மணிப்பூரை சேர்ந்த ரோஷிவினா தேவி நௌரெம் வெள்ளிபதக்கத்தை வென்றுள்ளார்.
சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்திற்கு அதிகமான வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். வரும் 8ஆம் தேதி வரையில் 40 விளையாட்டுகள் 400 வகையிலான போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகள் தொடங்கி 6 நாட்கள் ஆன நிலையில், சீன அதிகப்படியான தங்கப்பதக்கங்களை குவித்து வருகிறது.
ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்று அசத்திய மணிப்பூர் வீராங்கனை:
இந்த நிலையில், வுஷூ போட்டியின் 60 கிலோ எடை மகளிர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ரோஷிவினா தேவி நௌரெம் வெள்ளிபதக்கத்தை வென்றுள்ளார். சீனாவின் வூ சியோவேயிடம் 2 - 0 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளார். இந்த வெற்றியை மணிப்பூர் மக்களுக்கு அர்ப்பணிப்பதாக ரோஷிவினா தேவி தெரிவித்துள்ளார்.
வெற்றியை தொடர்ந்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், "வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், தங்கப் பதக்கத்தைப் பெற முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தம் இருக்கிறது. இந்த வெள்ளிப் பதக்கத்தை மணிப்பூர் மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்த ஆட்டத்தில் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன்.
இந்த ஆட்டத்தில் நான் செய்த தவறுகளை சரி செய்து கொண்டு சிறப்பாக விளையாடுவேன். வரும் நவம்பரில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக கடுமையாக பயிற்சி செய்வேன்" என்றார்.
பிரதமர் மோடி வாழ்த்து:
ரோஷிவினா தேவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "அர்ப்பணிப்பு மிக்க திறமையான ரோஷிபினா தேவி நௌரெம், வுஷு மகளிர் சாண்டா 60 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அவர் அசாதாரண திறமையையும், சிறந்து விளங்குவதற்கான இடைவிடாத நாட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய நேர்த்தியும் உறுதியும் போற்றத்தக்கது. அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டியின் 6ஆம் நாளான இன்று, 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. இதன் மூலம், இந்தியாவுக்கு 6 தங்கம் கிடைத்துள்ளது. அதுமட்டும் இன்றி 8 வெள்ளி, 10 வெண்கல பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5ஆம் இடத்தை பிடித்துள்ளது.
81 தங்கம், 44 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 146 பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும் 19 தங்கம், 19 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 73 பதக்கங்களுடன் தென் கொரியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள ஜப்பான் 15 தங்க பதக்கங்கள் வென்றுள்ளது.
கடந்த 5 மாதங்களாக மணிப்பூரில் நடந்து வரும் இனக்கலவரம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், மணிப்பூரை சேர்ந்த ரோஷிவினா தேவி ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்றிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.