Myanmar Chennai Flight: மியான்மர் - சென்னை இடையே நாளை மறுநாள் முதல் நேரடி விமான சேவை..! மகிழ்ச்சியில் பயணிகள்..!
வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மியான்மர் - சென்னைக்கு இடையே விமான சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
மியான்மர், தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளது. கடந்த 1989ஆம் ஆண்டு வரை, பர்மா என்றே மியான்மர் அழைக்கப்பட்டு வந்தது. வங்கதேசம், இந்தியா, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் மியான்மர் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. தமிழ்நாட்டுக்கும் மியான்மருக்கும் இடையேயான உறவு பல ஆண்டுகள் பழமைவாய்ந்தது.
வர்த்தகம் செய்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து மியான்மருக்கு சென்ற தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். இப்படி, வரலாற்று ரீதியாகவே தமிழர்கள் அதிக வசிக்கும் மியான்மருக்கு தமிழ்நாட்டில் இருந்து நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
மியான்மர் - சென்னை விமான சேவை:
அதன் அடிப்படையில், வரும் ஏப்ரல் 1ம் தேதி ( நாளை மறுநாள்) முதல் மியான்மர் - சென்னைக்கு இடையே விமான சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மியான்மர் நாட்டு விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வாரத்தில் ஒரு நாள் மட்டுமே, அதாவது சனிக்கிழமை மட்டுமே இந்த விமானம் இயக்கப்பட உள்ளது. மியான்மரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் விமானங்களின் நேரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என சென்னை விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரலாறு:
ஆங்கிலேய காலனித்துவ அரசால் தொழிலாளர்களாகவும் அரச அதிகாரிகளாகவும் வணிகர்களாகவும் தமிழ்நாட்டில் இருந்து பர்மா கொண்டு செல்லப்பட்டவர்களின், சென்றவர்களின் வம்சாவழியினரே பர்மா தமிழர் ஆவர்.
தொடக்க காலக்கட்டத்தில், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் மியான்மரில் வாழ்ந்து வந்தனர். 1960 களில் அங்கு ராணுவ ஆட்சி ஏற்பட்டது. இதனால் தமிழர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். இதனால் பெரும்பாலான தமிழர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
இருப்பினும் இன்றும் பர்மாவில் கணிசமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். தற்போது,பல பத்தாண்டுகளுக்குப் பிறகு பர்மாவில் சுமார் ஐந்து லட்சம் தமிழர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படும் பராசக்தி பர்மா தமிழர் அகதியாக தமிழ்நாட்டுக்கு திரும்புகையில் சந்திக்கும் அவலங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். மியான்மரில் சிறிது காலம் ஜனநாயக அரசு அமைக்கப்பட்டாலும், கடந்த 2021ஆம் ஆண்டு மீண்டும் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதன்பிறகு, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.