(Source: ECI/ABP News/ABP Majha)
Manish Sisodia: 14 மணிநேர சோதனை! மொபைல், கம்ப்யூட்டர்களை கைப்பற்றிய சிபிஐ! பரபரப்பாக பேசிய சிசோடியா!
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீட்டில் நடைபெற்ற 14 மணி நேர சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் தவறு செய்யவில்லை, அதனால் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் தொலைபேசி மற்றும் கணினியை சிபிஐ கைப்பற்றியது. சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் மணிஷ் சிசோடியா பேட்டியளித்தார்.
14 மணி நேர சோதனை
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீட்டில் நடைபெற்ற 14 மணி நேர சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் தவறு செய்யவில்லை, அதனால் பயப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றும், அரசியல் நோக்கங்களுக்காக பாஜக சிபிஐ-யை தவறாகப் பயன்படுத்துகிறது என்றும் கூறினார். ஆனால், நல்ல கல்வி மற்றும் சுகாதாரம் வழங்கும் பணி தொடரும், டெல்லி அரசு நிறுத்தாது என்றார்.
ஏன் ரெய்டு?
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வீடு, கலால்துறை ஆணையர் கோபிகிருஷ்ணாவின் அலுவலகம் உள்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைகள் 14 மணி நேரம் நீடித்தது. டெல்லியில் அரசின் புதிய மதுபானக் கொள்கையில் விதிமீறல் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த சிபிஐ, டெல்லி துணை முதலமைச்சரின் தொலைபேசி மற்றும் கணினியை கைப்பற்றியது.
சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுகிறது
மணீஷ் சிசோடியாவின் காரையும் சிபிஐ ஆய்வு செய்தது. இந்த விவகாரத்தில் மணீஷ் சிசோடியாவைத் தவிர, அப்போதைய கலால் ஆணையர் ஆரவ் கோபி கிருஷ்ணா, அப்போதைய கலால் வரித்துறை துணை ஆணையர் ஆனந்த் குமார் திவாரி, உதவி கலால் ஆணையர் பங்கஜ் பட்நாகர், 9 தொழிலதிபர்கள் ஆகியோர் மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் மணிஷ் சிசோடியா பேட்டியளித்தார்.
எங்களுக்கு பயமில்லை
நாங்கள் ரெய்டிற்கு முழுமையாக ஒத்துழைத்தோம். விசாரணைக்கு சிபிஐ என்னை அழைக்கவில்லை என்று கூறிய மணீஷ் சிசோடியா, "தன்னுடைய கணினி, தொலைபேசி மற்றும் சில கோப்புகளை சிபிஐ எடுத்துச் சென்றுள்ளனர். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, அதனால் எங்களுக்கு பயமில்லை. நேர்மையாக உழைத்து லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு பள்ளிகளை கட்டியுள்ளோம். நாங்கள் நேர்மையாக செயல்பட்டு, மருத்துவமனைகளை கட்டியுள்ளோம், அங்கு மில்லியன் கணக்கான மக்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்", என்று கூறினார்.