சென்னை உயர் நீதிமன்றத்தில் உயரும் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை! எத்தனை பேர் தெரியுமா?
வழக்கறிஞர்கள் எல். விக்டோரியா கவுரி, ஆர். கலைமதி, ஜி.கே. திலகவதி உள்ளிட்ட மூன்று வழக்கறிஞர்கள் உள்பட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இன்று பதவியேற்று கொண்டனர்.
நாட்டின் மூன்றாவது பழமையான உயர் நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றமாகும். ஆங்கிலேயர்கள் காலத்தில், விக்டோரியா மகாராணி உத்தரவின்பேரில் சென்னை உயர் நீதிமன்றம் கட்டப்பட்டது. இப்படி புகழ்பெற்று விளங்கும் பழம்பெரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
வழக்கறிஞர்கள் எல். விக்டோரியா கவுரி, ஆர். கலைமதி, ஜி.கே. திலகவதி உள்ளிட்ட மூன்று வழக்கறிஞர்கள் உள்பட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இன்று பதவியேற்று கொண்டனர்.
பெண்களுக்கு அதிக முக்கியத்துவம்:
கடந்த சில ஆண்டுகளாகவே, நீதித்துறையில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தை பொறுத்தவரையில், அதன் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை அளவு 34ஆகும். சமீபத்தில், ஐந்து பேர் நீதிபதிகளாக பதவியேற்றதன் மூலம் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32ஆக உள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. 32 பேரில் மூன்று பேர் மட்டும் பெண் நீதிபதிகள் ஆவர்.
நீதிபதிகள் கோலி, பி.வி. நாகர்தனா, திரிவேதி ஆகியோர் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகள் ஆவர். எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும், இந்திய நீதித்துறை வரலாற்றில் வரும் 2027ஆம் ஆண்டு முதல்முறையாக ஒரு பெண், இந்திய தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார். பி.வி. நாகர்தனா, உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையை பெற உள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற பெண் நீதிபதிகள்:
மற்ற உயர் நீதிமன்றங்களை காட்டிலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிக அளவில் பெண்கள் நீதிபதிகள் உள்ளனர். தற்போதுள்ள 57 நீதிபதிகளில் 14 பேர் பெண்கள் நீதிபதிகள் ஆவர்.
வி.எம். வேலுமணி, ஜே. நிஷா பானு, அனிதா சுமந்த், பவானி சுப்பராயன், ஆர்.தாரணி, ஆர்.ஹேமலதா, பி.டி. ஆஷா, ஆர்.என். மஞ்சுளா, டி.வி.தமிழ்செல்வி, எஸ். ஸ்ரீமதி, என். மாலா, எல். விக்டோரியா கவுரி, ஆர். கலைமதி, ஜி.கே. திலகவதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தின் பெண் நீதிபதிகள் ஆவர்.
நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் மட்டுமே உள்ள நிலையில், சென்னை நீதிமன்றத்தில் ஒப்பிட்டளவில் அதிக நீதிபதிகள் பணயாற்றிவது வரவேற்கத்தக்க ஒன்றாக கருத வேண்டும்.
இருப்பினும், உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் பெண் நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
முற்போக்காளராக கருதப்படும் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், அதற்கான நடவடிக்கைகளை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.