DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
DMK BJP: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் திமுக எம்.பிக்கள் எப்படி செயல்பட வேண்டும் என, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
DMK BJP: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தமிழ்நாட்டிற்கான கோரிக்கைகள் தொடர்பாக, திமுக எம்.பிக்கள் உரக்க பேசவேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சி எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதில், கூட்டத் தொடரில் திமுக எம்.பிக்கள் எப்படி செயல்பட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுகவின் தீர்மானம் என்ன?
தீர்மானத்தில், “மாநில உரிமை - நிதி உரிமை காக்க நாடாளுமன்றத்தில் முழங்குவோம்!
கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய பாஜக அரசால் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்காக மிகப்பெரிய திட்டம் என ஒன்றுகூட செயல்படுத்தப்படவில்லை. அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி அனைவருக்கும் சொல்லத் தேவையில்லை. நிதி ஒதுக்குவதிலும், திட்டங்களை அனுமதிப்பதிலும் தொடர்ந்து தமிழ்நாட்டின் உரிமை மறுக்கப்படுகிறது. இது மாநிலத்தின் வளர்ச்சியை பாதிப்பதோடு தமிழ்நாட்டு மக்களை இந்தியாவில் ஒதுக்கப்பட்ட பகுதியாக அந்நியப்படுத்துவது மாதிரியான நிலையை பாஜக அரசு செய்து வருகிறது.
நிதி ஒதுக்காத பாஜக அரசு:
கடந்த ஆண்டு புயல், வெள்ளம் என இருபேரிடர்களைத் தமிழ்நாடு சந்தித்தது. 37,907 கோடி ரூபாய் பேரிடர் நிதி கேட்டதற்கு ஒன்றிய அரசு 276 கோடி ரூபாயை ‘யானை பசிக்கு சோளப் பொரி’ போல் கொடுக்கிறது. ஒன்றிய அரசு வரிப் பகிர்வில் தமிழ்நாடு அரசை அடுத்தடுத்து வந்த நிதி குழுக்கள் வஞ்சித்து, நிதி ஒதுக்கீட்டை குறைத்தே வந்திருக்கிறது. நேரடி வரி வருவாய்க்குத் தமிழ்நாடு அரசு 2014-15 முதல் 2022-23 வரை 6.37 லட்சம் கோடி ரூபாயை வழங்கியுள்ள போதிலும் ஒன்றிய நிதிப்பகிர்வு இந்த காலகட்டத்தில் 4.75 லட்சம் கோடி ரூபாய்மட்டுமே. மறைமுக வரி வருவாயை எடுத்துக் கொண்டால், தமிழ்நாடு கொடுக்கும் ஒரு ரூபாய்க்கு 29 பைசா மட்டுமே மாநிலத்திற்குத் திருப்பி தரப்படுகிறது. உற்பத்தியில் முன்னேறியுள்ள மாநிலமான தமிழ்நாடு ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. சட்டத்தால் மாநிலத்திற்கு ஏற்படும் இழப்பீட்டை 30.06.2022-உடன் நிறுத்திவிட்டதால் தமிழ்நாட்டிற்கு 20,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மாநில அரசின் மீது நிதிச்சுமை
ஜி.எஸ்.டி.யால் மாநிலங்களின் வருவாய் குறைந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஒன்றிய அரசு மட்டும், தன் வருவாயைப் பெருக்கிக் கொள்ள செஸ் மற்றும் சர்சார்ஜ் விதிக்கிறது. ஒன்றிய அரசு செஸ் மற்றும் சர்சார்ஜ் மூலம் 2022-23-இல் வசூலித்துக் கொண்ட 5.1 லட்சம் கோடிரூபாயை மாநிலங்களுக்குப் பங்கீடு செய்திருந்தால், தமிழ்நாட்டுக்கு 20,800 கோடி ரூபாய் கிடைத்திருக்கும். அதையும் செய்யவில்லை.
ஒன்றிய அரசு மாநிலத்தில் செயல்படுத்தும் திட்டங்களில்கூட பெரும்பான்மையான சுமையும் மாநில அரசின் மீதே தூக்கி வைக்கப்படுகிறது. சமூகநீதிக்கு எதிரானதும், இந்தியைத் திணிப்பதும், ஏழை எளிய மக்களுக்கு கல்வித் தடைகளை ஏற்படுத்துவதுமான புதிய தேசியக் கல்விக் கொள்கையின் முரண்பாடான கருத்துருக்களை நாம் எதிர்க்கிறோம், ஏற்கவில்லை என்பதற்காக ‘சமக்ர சிக்ஷா' திட்ட நிதியைத் தமிழ்நாட்டிற்கு வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது ஒன்றியஅரசு.
தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்குகூட நிதி ஒதுக்கப்படாத நிலை நீடித்து தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
நிராகரிக்கப்படும் தமிழ்நாடு
தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ கடன் பெறும் உரிமையை ஒன்றிய பா.ஜ.க. அரசு நிராகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், பேரிடர் நிதி ஆகியவற்றைத் தொடர்ந்து திட்டமிட்டுப் பறித்து, குறைத்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல் தமிழ்நாட்டின் நிதி உரிமையை பாதித்து - மாநில நிதி நிலைமைக்குப் பெருத்த நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் அநீதியான செயல்பாடுகள் பற்றி நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் குரல் எழுப்ப, கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
எம்.பிக்களுக்கு அசைன்மென்ட்
சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் வக்ப் வாரிய திருத்தச்சட்டம், பாராளுமன்ற ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான ஒரேநாடு ஒரேதேர்தல், அரசியல் சட்டம் அளித்துள்ள மாநிலங்களுக்கான அதிகாரங்களையும் அபகரிப்பது, அவசர கதியில் கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்டங்கள், நிதி ஒதுக்கீட்டில் - பேரிடர் நிதி வழங்குவதில் பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளிடம் காட்டும் பாராமுகம், ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் விதமாக நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி குறைப்பு, இளைஞர்களை திண்டாட வைக்கும் 9.2 விழுக்காட்டிற்கு மேலான வேலை வாய்ப்பின்மை, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை நீர்த்துப் போக வைக்கும் வகையிலான சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஜனநாயக, மக்கள், அரசியல் சட்ட விரோத செயல்பாடுகளுக்கு எதிராக திமுகவின் உயர்நிலைச் செயல்திட்டக் குழு நிறைவேற்றிய தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் எதிரொலிப்போம்.
பாஜக அரசின் பாசிசத்தன்மைக்கு எதிராகவும், இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்டவும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை உறுதியாக எடுப்போம் என இக்கூட்டம் உறுதி அளிக்கிறது” என திமுகவின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.