Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்
''ஹலோ சாய் பல்லவியா?'' என ரசிகர்கள் தனக்கு போன் செய்து தொல்லை செய்வதாக கூறி அமரன் திரைப்படக் குழுவினரிடம் 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு இஞ்சினியரிங் மாணவர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த பொறியியல் மாணவர் விவி வகீசன். இவருடைய செல்போன் நம்பர் அமரன் திரைப்படத்தில் இந்துவாக நடித்திருந்த சாய் பல்லவியின் நம்பராக திரையில் காட்டப்பட்டுள்ளது. இதனால் தினமும் பலர் தனக்கு விடாமல் போன் செய்து சாய் பல்லவியிடம் கொடுக்க சொல்லுமாறு கூறுவதாக புகார் தெரிவித்துள்ளார் வகீசன்.
சாய் பல்லவி நம்பர் என தன்னுடைய செல்போன் நம்பரை திரையில் காட்டியதால் தனக்கு விடாமல் அனைவரும் போன் அடித்து தொந்தரவு செய்தவாகவும் இதனால் தன்னுடைய இயல்பு வாழ்க்கை பாதிப்பதாக அந்த மாணவன் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடிப்பில் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறைக் கொண்டு அமரன் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் இந்து ரெபேக்கா வர்கீஸ் முகுந்துக்கு தன்னுடைய செல்போன் நம்பரை ஒரு பேப்பரில் எழுதி தூக்கிப்போடுவார். பொதுவாக திரைப்படங்களில் வரும் செல்போன் நம்பர்கள் அனைத்தும் போலியானவை தான். ஆனால் இந்த படத்தில் வரும் நம்பரை எடுத்து ரசிகர்கள் பலர் சாய் பல்லவியின் நம்பர் என நினைத்து அந்த நம்பருக்கு கால் செய்ய தொடங்கிவிட்டனர். சிலர் சாய் பல்லவியுடன் பேச வேண்டும் என நினைத்தும் சிலர் ரியல் இந்துவின் நம்பராக இருக்குமோ என நினைத்தும் அந்த நம்பருக்கு போன் செய்துள்ளனர். ஆனால் உண்மையில் அந்த நம்பர் மாணவர் வகீசனுடையது.
இரவு பகலாக விடாமல் தனக்கு அழைப்பு வந்ததால் கடுப்பாகியுள்ளார் வகீசன். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அமரன் திரைப்படக்குழுவுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார் வகீசன். அதில்,
தீபாவளி அன்று அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அன்று குடும்பத்துடன் நான் தீபாவளியை கொண்டாடிக்கொண்டிருந்தேன். அப்போது என் செல்போனுக்கு சாய் பல்லவியிடம் பேச வேண்டும் என கூறி விடாமல் அழைப்பு வந்தது. முதலில் அதை நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அடுத்தடுத்த நாள் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. பிறகு எனக்கு வந்த சில வாய்ஸ் மெசேஜ்களின் மூலமே அந்த படத்தில் எண் இடம்பெற்றது குறித்து தெரிந்து கொண்டேன். அந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்து நான் சரியாக தூங்குவதில்லை..படிக்க முடிவதில்லை..இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது. போனை எடுத்தாலே யாரோ ஒருவர் கால் செய்கின்றன்ர். என்னால் ஒரு cab கூட புக் செய்ய முடிவதில்லை. INCOMING CALLS வந்துகொண்டே இருப்பதால் cab டிரைவரால் என்னை தொடர்பு கொள்ள முடியவில்லை'' என வகீசன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.மேலும் தன்னுடைய ஆதார், பேங்க் அக்கவுண்ட், கல்லூரி என அனைத்திலும் இந்த நம்பர் உள்ளதால் இதற்காக தன்னுடைய செல்போன் நம்பரை மாற்ற விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து சமூக வலைதளங்களில் சம்பந்தப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் இயக்குநர் மற்றும் நடிகரை டேக் செய்து தான் முறையிட்டதாகவும் ஆனால் அதற்கு எந்த பதிலும் எதிர்தரப்பில் இருந்து வராததால் தற்போது லீகல் நோட்டீஸ் அனுப்பியதாக கூறியுள்ளார் வகீசன்.
இந்நிலையில், அந்த நோட்டீஸ் மூலம், தன்னுடைய செல்போன் எண்ணை அமரன் திரைப்படத்தில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்ததோடு இதுவரை தான் அனுபவித்த தொல்லைகளுக்கு நஷ்ட ஈடாக தயாரிப்பு நிறுவனம் 1.1 கோடி ரூபாய் வழங்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
பாக்ஸ் ஆபீஸிலும் ஃபேன்ஸ் ஹார்டிலும் மெகா ஹிட்டான அமரன் திரைப்படத்திற்கு இப்படியான சிக்கல் எழுந்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.