கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுக
உறுப்பினர் சேர்க்கை பற்றி பேசுவதற்காக நடந்த பாஜக கூட்டத்தில் உட்கட்சி மோதல், அதிமுக விவகாரம் என அடுத்தடுத்து டாப்பிக் திசைமாறி தமிழிசையும், வானதியும் கடுப்பாகி கிளம்பியதாக கூறப்படுகிறது. அதுவும் அதிமுக கூட்டணி பற்றி பாஜக தலைமை முக்கிய அசைன்மெண்ட் ஒன்றையும் கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்திருந்தாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஒரு கோடி டார்கெட்டுடன் ஆரம்பமான பாஜக உறுப்பினர் சேர்க்கை, தற்போது 20 லட்சத்தை தாண்டுவதற்கே திணறுவதாக விமர்சிக்கப்படுகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இல்லாததால் கட்சிக்குள் சில குளறுபடிகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் உறுப்பினர் சேர்க்கை பற்றி ஆலோசிப்பதற்காக பாஜக உயர்மட்ட குழு கூட்டம் கமலாலயத்தில் நடைபெற்றது. தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் பாஜக தலைவர்கள் ஹெச் ராஜா, தமிழிசை, வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாஜகவில் நடக்கும் பெரும்பாலான பிரச்னைகளுக்கு மாவட்ட தலைவர்கள் தான் காரணம் என வானதி சீனிவாசன் காட்டமாக பேசியதாக கூறப்படுகிறது. தேர்தலில் தோல்வியடைந்ததற்கும் உட்கட்சி மோதலே காரணம் என்றும், தற்போது உறுப்பினர் சேர்க்கையிலும் மாவட்ட தலைவர்கள் மெத்தனம் காட்டுவதே பிரச்னை என கொதிப்படைந்துள்ளார். இதுபோல் ஒழுங்காக வேலை செய்யாதவர்களை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கறார் காட்டியதாக கூறப்படுகிறது.
ஆனால் பெரும்பாலான தலைவர்கள் அதிமுக கூட்டணி பற்றியே பேசியதாக தெரிகிறது. ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணி முறிந்ததால் தான் தேர்தலில் தோற்றுவிட்டோம், இனியாவது கூட்டணி வைக்க வேண்டும் என விருப்பத்தை சொல்லியுள்ளனர். உடனே தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், ”பாஜக தலைமை பேசி முடிவெடுக்கும், அதுவரை இபிஎஸ்-யையோ, விஜய்யையோ யாரும் கடுமையாக விமர்சிக்க வேண்டாம், திமுக மட்டும் தான் நம்முடைய டார்கெட். கூட்டணி முடிவுக்கு வரும் வரை வேறு யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம்” என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அண்ணாமலைக்கு எப்படி வரவேற்பு கொடுக்கலாம் என பேச்சு ஆரம்பமானதாக தெரிகிறது. என்ன பேச வேண்டுமோ அதை தவிர மற்றையெல்லாம் பேசுகிறார்களே என கடுப்பாகி தமிழிசையும், வானதியும் கூட்டம் முடிவதற்கு முன்பே வெளியேறி விட்டதாக பாஜக வட்டாரத்தில் சொல்கின்றனர்.
பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜாவின் செயல்பாடுகள் மாவட்ட அளவில் நிர்வாகிகளுக்கு திருப்திகரமாக இல்லை என்ற பேச்சு இருக்கிறது. அதனால் அவரவர் விருப்பம் போல் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அண்ணாமலை தமிழ்நாடு திரும்பியதும் மாவட்ட தலைவர்ளை சந்தித்து சில முக்கிய ஆர்டர்களை கொடுக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.