Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்
’’நம் தலைநகர் டெல்லி காற்று மாசுக்களால் நிறைந்து வாழவே தகுதியற்ற நகரமாக மாறிவிட்டது..இந்த பேரழிவில் இருந்து நம் தேசத்தையும் மக்களையும் காக்க வேண்டியது நமது தலையாய கடமை’’ என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி சுற்றுச்சூழல் ஆர்வலர் விம்லேந்து ஜ வுடன் உரையாடி டெல்லி நகரம் காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து கேட்டறிந்தார்.
அப்போது டெல்லியின் காற்று சுவாசிக்கவே தகுதியற்ற நிலையில் இருப்பதாகவும்,மக்கள் வாழவே தகுதியற்ற நகரமாய் டெல்லி மாறியுள்ளது என பகீர் தகவலை அவர் அளித்துள்ளார். மேலும் டெல்லியில் வாழும் மக்களின் சராசரி ஆயுட்காலம் 10 முதல் 12 ஆண்டுகள் குறையும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த வீடியோவை பகிர்ந்த ராகுல் காந்தி இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
’’வடமாநிலங்களில் காற்று மாசு ஒரு தேசிய அவசர நிலையாக உருமாறியுள்ளது. இது ஒரு பெரிய பொது சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது நமது குழந்தைகளின் எதிர்காலத்தை அழித்துவிடும். மூத்த குடிமக்களை மூச்சுத்திணறலால் கொன்றுவிடும். எண்ணற்ற உயிர்களை வதம் செய்யும். இது ஒரு மிகப்பெரிய சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பேரழிவு.
தன்னை சுற்றியுள்ள விஷக்காற்றில் இருந்து தப்பியோட முடியாமல் ஏழை எளிய மக்கள் தான் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவர். குடும்பங்கள் தூய்மையான காற்றை தேடி தவிக்கிறார்கள், குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு அவதியுறுகின்றனர். சுற்றுலாத்துறையின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. நமது தேசத்தின் நற்பெயருக்கும் கலங்கம் ஏற்பட்டுள்ளது.
மாசு படர்ந்த மேகங்கள் நூற்றுக்கணக்காக கிமீ வரை சூழ்ந்துள்ளன. இவை அனைத்தையும் அகற்ற வேண்டுமென்றால் அரசு, நிறுவனங்கள், நிபுணர்கள் மற்றும் குடிமக்கள் என அனைத்து தரப்பினரிடமும் பெரிய மாற்றங்களும் உடனடி நடவடிக்கையும் தேவை.
இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றம் கூடும்..நமது சிவந்த கண்களும் வறண்ட தொண்டையும் எம்பிக்களுக்கு இந்த அபாயம் குறித்து நினைவுப்படுத்தும். நமது இந்தியா இந்த பிரச்சனையில் இருந்து எப்படி விடுபடும் என்பது குறித்து நாம் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டியது நமது கடமை.’’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.