Samudrayaan Mission: சூரியன் சந்திரன்.. அடுத்த டார்கெட் கடல்தான்.. மனிதர்களை கடலுக்குள் அனுப்பும் சமுத்ரயான் திட்டம்.. முழு விவரம் இதோ..
ஆழ்கடல் வளங்களை ஆய்வு செய்வதற்காக இந்திய தனது முதல் மனிதனை கொண்ட ஆழ்கடல் திட்டமான சமுத்ரயான் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் மற்றும் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய பின், இந்தியா தனது முதல் மனிதர்களை கொண்ட ஆழ்கடல் பயணமான 'சமுத்ரயான்' திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. சமுத்ரயான் மூலம் 6 கிமீ கடல் ஆழத்திற்கு மூன்று மனிதர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
Next is "Samudrayaan"
— Kiren Rijiju (@KirenRijiju) September 11, 2023
This is 'MATSYA 6000' submersible under construction at National Institute of Ocean Technology at Chennai. India’s first manned Deep Ocean Mission ‘Samudrayaan’ plans to send 3 humans in 6-km ocean depth in a submersible, to study the deep sea resources and… pic.twitter.com/aHuR56esi7
சமுத்ரயான் திட்டத்தின் ஒரு பகுதியாக கடலின் ஆழத்தை ஆராயும் மனிதர்களை கொண்ட நீர்மூழ்கிக் கப்பலான 'மத்ஸ்யா 6000' ஐ மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆய்வு செய்தார். இந்த நீர்மூழ்கிக் கப்பல் சென்னையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்து செயல்பாட்டிற்கு தயாராக இருக்கும் நிலையில், ஆழ்கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மதிப்பீட்டை ஆய்வு செய்ய மூன்று மனிதர்களை சுமந்து கடலின் ஆழத்திற்கு பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழமான கடல் வளங்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் தாதுக்கள் போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக 6 கிமீ (6000 மீ) கடலுக்கு அடியில் அனுப்பும் வகையில் முதல் மனிதர்களை கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் 'மத்ஸ்யா 6000' வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கி வரும் சமுத்ரயான் மிஷனின் கப்பல் மத்ஸ்யா 6000 அடுத்த ஆண்டு வங்காள விரிகுடாவில் பணியமர்த்தப்படும். 'மத்ஸ்யா 6000' எனப்படும் நீர்மூழ்கிக் கப்பல் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வங்காள விரிகுடாவில் பல்வேறு சோதனைக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள டைட்டானிக் சிதைவுகளை பார்வையிட சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கியதை தொடர்ந்து இந்த நீர்மூழ்கி கப்பலின் வடிவமைப்பை விஞ்ஞானிகள் குழு கவனமாக ஆராய்ந்து வருகிறது.
வழக்கமான செயல்பாட்டின் கீழ் 12 மணிநேரமும், நெருக்கடியான நேரத்தின் போது 96 மணிநேரமும் நீடிக்கும் வகையில் இந்த நீர்மூழ்கி கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிக்கல், கோபால்ட் மற்றும் மாங்கனீஸ் போன்ற விலைமதிப்பற்ற கனிமங்கள் மற்றும் உலோகங்களை ஆய்வு செய்வதற்காக சமுத்ராயன் 3 விஞ்ஞானிகளை கடலுக்குள் அழைத்துச் செல்லும். அதேசமயம் இரண்டு பயணிகள் உடன் இருப்பார்கள் மேலும் ஒரு டைட்டானியம் அலாய் ஆபரேட்டர், நீரின் அழுத்தத்தைத் தாங்கியப்படி மத்ஸ்யா 6000 நீர்மூழ்கிக் கப்பலில் இருப்பார். 6000 மீட்டர் ஆழத்தில், நிலப்பரப்பில் இருப்பதை விட 600 மடங்கு அதிகமான அழுத்தம் இருக்கும், இந்த சூழலில் பயணிகள் ஒலி அலைகளைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பணி ஆழ்கடல் மர்மங்களுக்கு விடை அளிக்கும். இந்த திட்டத்தில் வெற்றி பெற்றால், அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து கடல்சார் நடவடிக்கைகளை மேற்கொள்ள இது உதவும் என தெரிவிக்கின்றனர்.