Poverty: உலகின் வறுமை, மக்களின் பட்டினியை ஒழிக்க மெகா திட்டம்! விஸ்வரூபம் எடுத்த இந்தியா!
வறுமையை ஒழிக்க IBSA நிதியத்திற்கு இந்தியா சார்பில் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் தரவுகளின்படி (2019ஆம் ஆண்டுக்கானது), உலக மக்கள் தொகையில் 8.5 சதவிகிதத்தினர் கடும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். அதாவது, உலகம் முழுவதும் 60 கோடியே 60 லட்சம் பேர் கடும் வறுமையில் தவித்து வருகின்றனர். கடந்த 2020ஆம் ஆண்டு, அந்த எண்ணிக்கை 73 கோடியே 30 லட்சமாக உயர்ந்ததாகவும் 2022ஆம் ஆண்டு, அந்த எண்ணிக்கை 68 கோடியே 20 லட்சமாக குறைந்ததாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
1 மில்லியன் டார் வழங்கிய இந்தியா:
உலகின் வறுமையை ஒழிக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து IBSA நிதியத்தை உருவாக்கியது. இந்த நிதியத்தின் மூலம் வறுமையை ஒழிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், IBSA நிதியத்திற்கு இந்தியா சார்பில் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது. 1 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான காசோலையை தெற்கு ஒத்துழைப்புக்கான ஐநா அலுவலகத்தின் (UNOSSC) இயக்குனர் டிமா அல்-காதிப்பிடம் ஐநாவுக்கான இந்திய தூதர் ருசிரா கம்போஜ் வழங்கியுள்ளார்.
காசோலையை வழங்கி பேசிய ஐநாவுக்கான இந்திய தூதர், "இந்தியாவின் ஜி20 பிரசிடென்சி மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தியது. அதன்படி, உலகளாவிய தெற்கில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் இந்த நிதி சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ஒத்துழைப்பின் உணர்வை வலுப்படுத்தியுள்ளது என்று நாங்கள் நம்புவதால், ஐபிஎஸ்ஏ நிதியை ஆதரிப்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது" என்றார்.
IBSA நிதியத்திற்கு இதுவரை இந்தியா கொடுத்தது எவ்வளவு?
இதுகுறித்து ஐநாவுக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியன் டாலரை IBSA நிதியத்திற்கு வழங்குகிறது. இதன் மூலம், வளரும் நாடுகளின் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு IBSA நிதியம் உருவாக்கப்பட்டு, 2006ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. IBSA நிதியம் தொடக்கப்பட்டதில் இருந்து இந்தியாவின் மொத்த பங்களிப்பு 18 மில்லயன் டாலரை தாண்டியுள்ளது. IBSA நிதியானது இதுவரை 50.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது. இது உலகளாவிய தெற்கின் 37 நாடுகளில் 45 திட்டங்களுக்கு பயன்பெறுகிறது.
இந்த ஆண்டு ஏற்கனவே மூன்று திட்டங்களுக்கு IBSA நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது தெற்கு பெலிஸில் 'மைக்ரோ-கிரிட்களைப் பயன்படுத்தி கிராமப்புற மின்மயமாக்கல், தெற்கு சூடானில் 'நிலையான விவசாயம் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல்' மற்றும் பாலஸ்தீனத்தில் 'முபத்ரிட்டியில் வேளாண் வணிக வளர்ச்சியில் முதலீடு' போன்ற திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு பிணை.. சுல்தான்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!