Kalki Dham Mandir: இந்தியாவில் முக்கியமாக மாறும் மற்றொரு பிரமாண்ட கல்கி கோயில் - அப்படி என்ன இருக்கு?
Kalki Dham Mandir: உத்தரபிரதேசத்தில் பிரமாண்டமாக கட்டப்பட உள்ள கல்கி கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
Kalki Dham Mandir: உத்தரபிரதேசத்தில் பிரமாண்டமாக கட்டப்பட உள்ள கல்கி கோயிலின் சிறப்பம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
கல்கி கோயில்:
கலியுகத்தின் இறுதியில் பகவான் விஷ்ணுவின் 10வது அவதாரமான கல்கி தோன்றுவார் என இந்து சமயத்தினர் கருதுகின்றனர். அதிலும், உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் தான் பிறப்பு நடக்கும் என்றும் நம்புகின்றனர். இந்நிலையில் தான், அந்த மாவட்டத்தில் கட்டப்பட உள்ள கல்கி கோயிலுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகம், அபுதாபியில் அண்மையில் கோயில் திறப்பு விழா ஆகியவற்றைக் குறிப்பிட்டு, கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்த விஷயம் தற்போது நனவாகியுள்ளது” என கூறினார். இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கல்கி தாம் பீடாதீஸ்வர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து, கோயிலில் இடம்பெற உள்ள சிறப்பம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
கல்கி தாம் கோயில் - இடம்
கல்கி தாம் கோயில் உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஐச்சோடா கம்போவில் கட்டப்பட உள்ளது.
கல்கி தாம் கோயில் - அம்சங்கள்
கல்கி மகாவிஷ்ணுவின் கடைசி அவதாரம் என்றும் கலியுகத்தின் முடிவு என்றும் நம்பப்படுகிறது. புராணங்களின் படி, கல்கி உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் பிறப்பார் என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தற்போது, கல்கி பகவானுக்கான கோயில் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இங்குள்ள பழைய சிலை அப்படியே தொடர்வதோடு, கல்கி பகவானுக்கான புதிய சிலையும் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 கர்ப்ப கிரகங்கள்:
விஷ்ணுவின் 10 அவதாரங்களை குறிக்கும் வகையில் இந்த கோயில் 10 கர்ப்ப கிரகங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சிங்கம், வராகம், கிருஷ்ணர் மற்றும் ஆமை என 10 அவதாரங்களுக்கும் தனி கர்ப்ப கிரகங்கள் இருக்கும் அதோடு, 68 சிறிய கோயில்களும் இடம்பெற உள்ளன.
இரும்பு இல்லாத கோயில்:
கோயில் கட்டுமான பணிகளில் இரும்பு மற்றும் எஃகு பயன்படுத்தக் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டுமான பணிகளுக்காக ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பன்ஷி பஹர்பூரில் இருந்து இளஞ்சிவப்பு கற்கள் கொண்டு வரப்பட உள்ளது. சோம்நாத் மற்றும் அயோத்தி ராமர் கோயில்களும் இங்கிருந்து கொண்டுவரப்பட்ட கற்களைக் கொண்டு தான் கட்டப்பட்டுள்ளன.
கோயிலின் உயரம்:
கோவிலின் 'சிகரம்' 108 அடி உயரத்திலும், கல்கி கோவிலின் மேடை 11 அடி உயரத்திலும் கட்டப்படும். சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கல்கி தாம் கோயில் அடுத்த 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்கி பகவான் எப்போது பிறப்பார்?
கல்கி பிறக்கும்போது, சிவபெருமான் அவருக்கு வெள்ளைக் குதிரை மற்றும் தேவ்தத்தையும், பரசுராமர் வாளையும், பிருஹஸ்பதி கல்வியயும் வழங்குவார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.