விபத்தால் மரணம்...62 பேர் ஏற்கனவே பலி...சைரஸ் மிஸ்திரி இறந்த நெடுஞ்சாலையை சுற்றும் மர்மம்..
இந்த ஆண்டு மட்டும் 262 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் குறைந்தது 62 உயிரிழிப்புகள் நிகழ்ந்ததாகவும் 192 பேர் காயமடைந்ததாகவும் போக்குவரத்து காவல்துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி மரணமடைந்தார் என்ற செய்தி இந்த மாத தொடக்கத்தில் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது.
அங்கு இதுபோன்று விபத்து நடப்பது முதல் முறை அல்ல. பல விபத்துகள் ஏற்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் தானேயில் உள்ள கோட்பந்தரிலிருந்து பால்கர் மாவட்டத்தில் உள்ள டாப்சாரி வரையிலான 100 கிமீ சாலையில், இந்த ஆண்டு மட்டும் 262 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் குறைந்தது 62 உயிரிழிப்புகள் நிகழ்ந்ததாகவும் 192 பேர் காயமடைந்ததாகவும் போக்குவரத்து காவல்துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலான நேரங்களில் அதி வேகம், ஓட்டுநரின் பிழை ஆகியவற்றின் காரணமாகவே விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், சாலையின் மோசமான பராமரிப்பு, முறையாக பலகைகள் வைக்காதது, வேகத்தடை நடவடிக்கை எடுக்காதது போன்றவையும் அதிக விபத்துகளுக்குக் காரணம் என்று அலுவலர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மகாராஷ்டிரா நெடுஞ்சாலை காவல்துறை அலுவலர் கூறுகையில், "செப்டம்பர் 4 ஆம் தேதி சைரஸ் மிஸ்திரி பயணித்த மெர்சிடிஸ் கார் விபத்துக்குள்ளான சரோட்டிக்கு அருகில் உள்ள பகுதியில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 25 கடுமையான விபத்துகளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதே காலக்கட்டத்தில் சிஞ்சோடி அருகே 34 கடுமையான விபத்துக்களில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மானூர் அருகே 10 விபத்துகளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்" என்றார்.
மேலும் பேசிய அவர், "விபத்துகளின் போது சரோதி ஒரு பிரச்னைக்குரிய இடமாக பார்க்கப்படுகிறது. மேலும், மும்பையை நோக்கி சுமார் 500 மீட்டர் நீளம் சாலையும் பிரச்சினைக்குரிய ஒன்றுதான். மும்பையை நோக்கி பயணிக்கும் போது சூர்யா நதி பாலத்திற்கு முன் சாலை வளைவுகள் மற்றும் மூன்று வழி வண்டிப்பாதை இருவழிப்பாதையாக சுருங்குகிறது.
ஆனால், பாலத்தை அடையும் முன் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் பயனுள்ள சாலைப் பலகைகளோ, வேகத்தைக் கட்டுப்படுத்தும் வேக தடையோ இல்லை.
மகளிர் மருத்துவ நிபுணர் அனாஹிதா பந்தோல் ஓட்டிச் சென்ற கார் அதிவேகமாக ரோட் டிவைடர் மீது மோதியது. மிஸ்திரி மற்றும் பின் இருக்கையில் பயணம் செய்த அவரது நண்பர் ஜஹாங்கிர் பண்டோல் இறந்தனர். அனாஹிதா மற்றும் முன்வரிசை பயணிகள் இருக்கையில் இருந்த அவரது கணவர் டேரியஸ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
இந்திய சாலை காங்கிரஸின் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டுதல்களை சாலையை பராமரிக்க வேண்டியவர்கள் கவனிப்பதில்லை. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) கீழ் சாலை வருகின்றன. ஆனால், சுங்க கட்டணத்தை வசூலிக்கும் பொறுப்பு தனியார் ஏஜென்சியிடம் உள்ளது" என்றார்.