"இவ்ளோ மன அழுத்தத்திற்கு காரணம் என்ன?" ஐஐடி மாணவர் தற்கொலையில் தந்தை வேதனை!
மேற்கு வங்க மாநிலம் கராக்பூர் ஐஐடியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் உள்ளிட்ட நாட்டின் முன்னணி உயர் கல்வி நிலைங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் இதன் காரணமாக மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாவதாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் கூட, மும்பையில் உள்ள ஐஐடியில் 18 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஐ.ஐ.டி. மும்பையில் பட்டியல் சாதி மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு காரணமாக அவர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக மாணவர் குழுவினர் குற்றம் சாட்டினர்.
ஐஐடியில் தொடரும் மாணவர்கள் தற்கொலை:
இந்நிலையில், தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் கராக்பூர் ஐஐடியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவரின் பெயர் கிரண் சந்திரா. இவர், கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது விடுதியில் இறந்த நிலையில் காணப்பட்டார். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கிரண், பி.டெக் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
தனது மகன் கிரண் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக அவரது தந்தை சந்தர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஏன் இவ்வளவு மன அழுத்தம்? ஐஐடியில் நம் குழந்தைக்கு ஏன் இவ்வளவு கஷ்டம் தரப்படுகிறது? எனது மகன் ராகிங் கொடுமைக்கு உள்ளானதாக நினைக்கவில்லை. ஆனால், கல்லூரி சூழல் காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார்" என்றார்.
இதுகுறித்து கராக்பூர் ஐஐடி நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "லால் பகதூர் சாஸ்திரி (எல்பிஎஸ்) ஹாலில் தங்கியிருந்த சந்திரா செவ்வாய்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவரின் மரணத்துக்கு காரணம் என்ன?
சுமார் இரவு 7:30 மணி வரை, சந்திரா தனது இரண்டு அறை தோழர்களுடன் அவர்களது ஹாஸ்டல் அறையில் இருந்தார். பின்னர், மற்ற இரண்டு மாணவர்களும் படிப்பதற்காக சென்றுவிட்டனர்.
இதையடுத்து, இரவு 8.30 மணியளவில், எல்.பி.எஸ்., ஹாலில் சந்திராவின் அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதை மற்ற மாணவர்கள் கண்டனர். அதன் கதவு உடைக்கப்பட்டது. உள்ளே, அவர் சுயநினைவின்றி இருந்தார். டாக்டர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும், இரவு 11:30 மணியளவில் சந்திரா இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. ஓராண்டுக்கு முன்பு, ஐஐடி காரக்பூரில் படித்து வந்து அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர் ஃபைசன் அகமதுவின் சிதைந்த உடல், அக்டோபர் 14 ஆம் தேதி அவரது விடுதி அறையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.