Radha Against Child Marriage | திருமண முயற்சியில் தப்பிய குழந்தை.. இன்று களப் போராளி.. 16 வயது ராதாவின் பயணம்..!
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராதா பாண்டே என்னும் பதினாறு வயது சிறுமி தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை எதிர்த்து போராடி நிறுத்தியது மட்டுமின்றி குழந்தை திருமணத்திற்கு எதிராக களத்திலும் இறங்கியுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் கோடெர்மா பகுதியை சேர்ந்தவர்தான் ராதா பாண்டே, இவருக்கு 16 வயதாகிறது. இவருடைய கிராமத்தில் அனைவருக்கும் போன்ற சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. ராதாவுக்கும் அதே போல ஜூன் 23-ஆம் தேதி திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதனை மே மாதத்தின் மத்தியில் அறிந்துகொண்ட ராதா, அதனை தடுத்து நிறுத்த முடிவு செய்தார். தன் பெற்றோர்களிடம் எவ்வளவோ பேசி பார்த்திருக்கிறார். எவ்வளவு பேசியும் திருமணத்தை நிறுத்த முடியாமல் போனதால், அடுத்தபடியாக அவருக்கு பார்க்கப்பட்ட மணமகனின் வீட்டாரிடம் பேசியுள்ளார். அவர்களும் ராதா பேசுவதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. இதற்கெல்லாம் முன்பாகவே நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியின் குழந்தைகள் அமைப்பில் குழந்தை திருமண தடுப்புப்பிரிவில் அந்த மாவட்டத்திற்கு தலைமை வகித்துக்கொண்டிருக்கிறார் ராதா. அந்த அமைப்பிற்கு விஷயத்தை கொண்டுசெல்கிறார் ராதா. விஷயம் அங்கு சென்றதும் அவர்கள் வந்து பேசுகையில், மணமகன் தந்தை திருமணத்தை நிறுத்த சம்மதிக்கிறார். இப்படித்தான் ராதா தன் திருமணத்தை நிறுத்தி இருக்கிறார்.
இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா எடுத்த ஆவணப்படத்தில் ராதா கூறியிருப்பதாவது, "எனக்கு திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்று அறிந்ததும் பதறினேன், குறைந்த வயதில் திருமணம் செய்துகொண்டால் பெண்கள் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை என் வீட்டில் உள்ளவர்களுக்கு விளக்கினேன், அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. பிறகு எனக்கு பார்த்திருந்த மணமகனின் தந்தையிடம் பேசினேன், அவரும் ஒத்துக்கொள்ளவில்லை, பின்பு நான் பொறுப்பு வகிக்கும் கைலாஷ் சத்யார்த்தி சாரின் அமைப்புதான் இதற்கெல்லாம் உதவியது. இப்போதும் அவர்கள் நான் சொல்ல வந்த விஷயத்தை புரிந்து கொண்டதால் திருமணத்தை நிறுத்தவில்லை, போலீஸ் வருமே என பயந்து தான் நிறுத்தினார்கள். இந்த விஷயத்தை பற்றி பேசியவர்கள் யாரும் புரிந்துகொண்டதாக தெரியவில்லை. என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்கள் அவ்வளவுதான்" என்று முடித்தார்.
இப்படி தன் திருமணத்தை மட்டும் நிறுத்திவிட்டு இல்லாமல், அதே கிராமத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் திருமணத்தையும் நிறுத்தி இருக்கிறார் ராதா. அவர் தற்போது அந்த மாவட்டத்தின் குழந்தை திருமண தடுப்பிற்கான அடையாளமாக மாறி இருக்கிறார். இவரது தாயாரும் மூத்த சகோதரியும் குழந்தையாக இருக்கும்போதே திருமணம் முடித்து வைக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை திருமண தடுப்பு பிரிவின் மாவட்ட தலைவராக இருக்கும் நான் எப்படி அதே குற்றத்தால் பாதிக்கப்பட முடியும், என் பெற்றோரை எப்படி அனுமதிக்க முடியும் என்று கர்வத்துடன் கேட்கும் ராதாவின் முகத்தில் அத்தனை பெருமிதம்.