Cyclone Biparjoy: அதென்ன பிபர்ஜாய் புயல்? பெயர் காரணம் என்ன? வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அப்டேட்!
Cyclone Biparjoy: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ‘பிபர்ஜாய்’ (Biparjoy) என்று பெயரிடப்பட்டுள்ளது.
புயல் நகரும் வேகம்:
இந்த புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, அட்சரேகை (latitude) 12.3°N மற்றும் தீர்க்கரேகை (longitude) 66.0°E பகுதியில் மையம் கொண்டுள்ளது. அதாவது கோவாவின் மேற்கு-தென்மேற்கே சுமார் 910 கிமீ தொலைவில், 1030 கிமீ மும்பைக்கு தென்மேற்கே, போர்பந்தருக்கு தென்-தென்மேற்கே 1110 கி.மீ மற்றும் கராச்சிக்கு தெற்கே 1410 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக தீவிரமடைந்து தீவிர சூறாவளியாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலுக்கு பெயரிடும் முறை
புயலின் வேகம், அது ஏற்படுத்தும் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்காக ஓர் அளவுகோல் 19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ராணுவ அட்மிரல் சர் பிரான்சிஸ் பீபோர்ட் உருவாக்கினார். உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் புயல் அழைக்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகளில் Hurricane (சூறாவளி), அமெரிக்காவில் Tornado (சுழன்றடிக்கும் சூறாவளி), . இந்தியப் பெருங்கடல் பகுதியில் Cyclone (புயல்) என அழைக்கப்படுகிறது.
உலக வானிலை அமைப்பின் ( World Meteorological Organisation (WMO)) மண்டல சிறப்பு வானிலை ஆய்வு மையம் (Special meteorological stations) 2004-ம் ஆண்டிலிருந்து புயலகளுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
கடல் மாலுமிகள், வானிலை ஆய்வாளர்கள், மக்கள் என அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு நாடுகளிலும் புயலுக்கு தனித்தனிப் பெயர் சூட்டுவது வழக்கம்.
வங்காள விரிகுடா, அரபிக்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு இந்திய வானிலை ஆய்பு மையம் பெயர் சூட்டும். வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள்,மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஈரான், கத்தார்,சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், ஏமன் உள்ளிட்ட நடுகள் அடங்கிய ஆலோசனை குழு புயலுக்கு பெயரிடுகின்றன. அந்த வகையில், அரபிக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு பிபர்ஜாய் என்று பெயரிடப்பட்டுள்ளது.
‘பிபர்ஜாய்’ அர்த்தம் என்ன?
‘பிபர்ஜாய்’ என்ற பெயரை வங்கதேசம் பரிந்துரைத்தது. இதற்கு ஆங்கிலத்தில் 'calamity' அல்லது 'disaster' என்று பொருள். அதாவது பேரழிவு, பேரிடர் என்று அந்த்தம்.
பிபர்ஜாய் புயலில் தாக்கம்:
பீபர்ஜாய் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சூறாவளி புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு, வியாழக்கிழமையன்று (08.06.2023 / நாளை) தீவிர சூறாவளி புயலாக மாறும் என்றும், அதன் தீவிரம் வெள்ளிக்கிழமையன்று (09.06.2023- நாளை மறுநாள்) மிக தீவிர சூறாவளி புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா - கர்நாடகா கடற்கரை பகுதிகள், லட்சத்தீவுகள், மாலத்தீவுகள், கோவா - மகாராஷ்டிரா கடற்கரை பகுதிகளில் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கல் கடற்கரைக்கு திரும்பும் மாறும், கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
அரபிக்கடல் பகுதிகள்:
07.06.2023: வடக்கு கேரள– கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு, மாலை முதல் அதே பகுதிகளில் காற்றின் வேகம் உயர்ந்து மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.