குஜராத்தில் கோவிட் மரணங்கள் மறைக்கப்படுகின்றன - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..
குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் மறைக்கப்பட்டு வேறு காரணங்கள் தவறாக கூறப்படுகின்றன
குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் மறைக்கப்படுகின்றன என்று காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், " குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் மறைக்கப்பட்டு வேறு காரணங்கள் தவறாக கூறப்படுகின்றன. உதாரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை (17-4-2021) அன்று குஜராத்தின் 7 நகரங்களில் மட்டுமே 689 சடலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளின்படி எரிக்கப்பட்டன. ஆனால் குஜராத் அரசின் அதிகாரபூர்வமான அறிவிப்பில் 78 நபர்கள் மட்டுமே கொரோனா தொற்றால் இறந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது" என பதிவிட்டார். அகமதாபாத், சூரத், ராஜ்கோட், வதோதரா, காந்திநகர், ஜாம்நகர், பாவ்நகர் ஆகிய ஏழு நகரங்களில் இருந்து 689 உடல்கள் கோவிட்-19 நெறிமுறைகளின் கீழ் எரிக்கப்பட்டன.
குறிப்பாக, அகமதாபாத்தில் 1,200 படுக்கைகள் கொண்ட கோவிட்-19 பிரத்யேகமாக பொது மருத்துவமனையில் இருந்து மட்டும் கடந்த வெள்ளிக்கிழமை 200 உடல்கள் கொரோனா கட்டுப்பாடுகளின்படி எரிக்கப்பட்டதாக ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்தது. மேலும், சூரத் நகரில் செயல்படும் 2 முக்கிய மருத்துவமனைகளிலிருந்து, 190 உடல்கள் தகனத்திற்காக அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டில் முதலாவது கோவிட் அலை சவாலுக்குப் பிறகு, அனைத்து கோவிட்-19 இறப்புகளையும் வகைப்படுத்துவதற்கான உத்தரவை குஜாராத் மாநில அரசு பிறப்பித்தது. அந்த உத்தரவில் இறப்புக்கான முதன்மைக் காரணம் என்று கொரோனா அறிகுறிகளால் என்று நிர்ணயிக்கப்பட்ட பாதிப்புகள் மட்டுமே கோவிட்-19 இறப்புகளாக வகைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இத்தகைய இறப்புகள் மட்டுமே மாநில அரசின் கொரோன உயிரிழப்பு பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.
நீரிழிவு நோய், நாள்பட்ட சிறுநீரக பிரச்னைகள், உயர்இரத்த அழுத்தம் இதய சம்பந்தப்பட்ட பிரச்னைகள் போன்ற இணை நோய்களால் நிகழ்ந்த இறப்புகள் கோவிட்-19 இறப்புகளாக கருதப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் இரண்டாவது கொரோனா அலை மார்ச் 2021 முதல் நாடு முழுவதும் சவால்களை ஏற்படுத்தி வருகிறது. இதில் பெரும்பாலான இறப்புகள், திடீர் இதய செயலிழப்பு, மூளை பக்கவாதம், உறுப்பு செயலிழப்புகள் போன்றவைகளால் ஏற்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது அலையில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத், சூரத் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அகமதாபாத் மாவட்டத்தில் கோவிட் நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 21005-ஆக உள்ளது. சூரத் மாவட்டத்தில் இந்த எண்ணிக்கை 12902-ஆக உள்ளது. அஹமதாபாத்தில், பல தகன மைதானங்களில் வரும் உடல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கு 24 பேர் கொரோனா நோய்த்தொற்றால் மரணம் அடைந்ததாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. பல உடல்கள் திறந்தவெளி மைதானத்தில் எரியூட்டப்பட்டு வருகின்றன.