முன்னணி நிறுவன சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த ரூ.500 நோட்டு... போட்டிப்போட்டு வாங்கிய நம்ம மக்கள்..என்ன காரணம்?
கர்நாடகாவில் முன்னணி நிறுவனத்தின் சிப்ஸ் பாக்கெட்டில் 500 ரூபாய் நோட்டுகள் இருந்த சம்பவம் மக்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் முன்னணி நிறுவனத்தின் சிப்ஸ் பாக்கெட்டில் 500 ரூபாய் நோட்டுகள் இருந்த சம்பவம் மக்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலங்கள் மாறிவிட்ட சமூகத்தில் நாளும் விதவிதமான திண்பண்டங்கள் சந்தைகளில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக குழந்தைகளை கவரும் வகையில் அழகழகான வண்ணங்களில் சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் சிப்ஸ் பாக்கெட்டுகளும், அதன் சுவைகளும் அனைத்து வயதினருக்கும் பிடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
எந்த கடைக்கு சென்றாலும் அங்கு வாசலில் முதலில் இத்தகைய சிப்ஸ் பாக்கெட்டுகள் விதவிதமான சுவைகளில் தொங்க விடப்பட்டிருக்கும். இதனை வாங்கும் போது ஒரு சில பாக்கெட்டுகளில் சிப்ஸ்களின் அளவு அதிகமாகவும், ஒரு சிலவற்றில் மிகக் குறைவாகவும் இருக்கும். இவை உடல் நலத்திற்கு நல்லதல்ல என மருத்துவ உலம் தெரிவித்தாலும் ரூ.2ல் இருந்து அளவுக்கேற்ப ரூ.30 வரை விற்கப்படும் சிப்ஸ்களை குழந்தைகள் அடம்பிடிப்பதால் வேறுவழியில்லாமல் பெற்றோர்களும் வாங்கி கொடுக்கிறார்கள்.
அந்த வகையில் கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுர் தாலுகாவில் அமைந்துள்ள குன்னூர் கிராமத்தில் முன்னணி நிறுவனத்தின் சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்க மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வரிசைக் கட்டி நிற்கின்றனர். இதற்கு காரணம் சில தினங்களுக்கு முன் சிப்ஸ் பாக்கெட்டுகள் வாங்கிய சிலருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த பாக்கெட்டுகளில் சிப்ஸ் தவிர, 500 ரூபாய் நோட்டுகளும் இருந்துள்ளது.
ஒரு பாக்கெட்டுகளில் ரூ.500 முதல் ரூ.3000 வரை இருந்துள்ளது. ஆக மொத்தம் சிப்ஸ் பாக்கெட்டுகளில் ரூ.20 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் அக்கம் பக்கத்தினருக்கு சென்ற நிலையில் கடைகளில் சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்க குவிந்தனர். ஆனால் அதன்பிறகு புதிய பாக்கெட்டுகளில் அத்தகைய பணம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அதனை வாங்கியவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
முதலில் சிப்ஸ் பாக்கெட்டுகளில் இருந்து போலி நோட்டுகள் என கூறப்பட்ட நிலையில், அவை ஒரிஜினர் நோட்டுகள் என உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. குறிப்பிட்ட நிறுவனம் விளம்பரத்திற்காக இத்தகைய செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எது எப்படியோ எங்க வியாபாரம் சக்ஸஸ் என கடைக்காரர்களும், விநியோகஸ்தர்களும் மிக மகிழ்ச்சியாக உள்ளனர்.