கருணாநிதியின் பிறந்த நாள்: சொந்த ஊரில் இலவச உணவு வழங்கிய ஹோட்டல் உரிமையாளர்!
புலிவலம் பகுதியில் இன்று ஒருநாள் முழுவதும் கார்த்திக் என்பவர் தனது உணவகத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கி வருகிறார்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த ஊரில் அவரது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஒரு நாள் முழுவதும் உணவகத்தில் இலவச உணவு வழங்கப்படுகிறது.
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் திமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கருணாநிதியின் பிறந்தநாளை திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இனிப்புகள் வழங்கியும் மரக்கன்றுகள் வழங்கியும் தொடர்ந்து திமுகவினர் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் கருணாநிதி பிறந்த சொந்த மாவட்டமான திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆதரவற்ற விதவை பெண்கள் 300க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இலவசமாக தையல் இயந்திரத்தை வழங்கினார் முன்னதாக கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இதேபோன்று காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு புத்தாடை மற்றும் உணவு வழங்கி கருணாநிதியின் பிறந்தநாள் விழா திருவாரூரில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் பிரகாஷ் இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினி சின்னா கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கருணாநிதி மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் சங்கர் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் செந்தில் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். மேலும் திருவாரூர் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் புதிய பேருந்து நிழற்குடை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் இன்று திறந்து வைத்தார்.
திருவாரூர் அருகே உள்ள புலிவலம் பகுதியில் இன்று ஒருநாள் முழுவதும் கார்த்திக் என்பவர் தனது உணவகத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கி வருகிறார். இந்த இலவச உணவு வழங்கும் நிகழ்வினை திருவாரூர் ஒன்றியச் செயலாளர் புலிவலம் தேவா தொடங்கி வைத்தார். கலைஞரின் சொந்த மாவட்டமான திருவாரூரில் புலிவலத்தில் கடை வைத்திருக்கும் திமுக கட்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாள் மற்றும் தற்போதைய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆகியோரது பிறந்தநாளுக்கு தனது உணவகத்தில் பல வருடங்களாக இலவச உணவு வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கருணாநிதியின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டடு திமுக கொடி கம்பம் ஏற்றி பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா திருவாரூர் மாவட்டத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.