லாக்டவுனெல்லாம் உங்களுக்குத்தான், எங்களுக்கு இல்ல : மருதமலையில் ஜாலி உலா வந்த காட்டு யானைகள்..
ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. வனத்தை ஒட்டிய பகுதிகளில் வாகன இரைச்சல்கள் இல்லாததால் அமைதியான சூழல் நிலவுகிறது. இதனால் வனத்தை ஒட்டிய கிராமப் பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாய்க்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள இந்த வனப்பகுதிகள், யானை, சிறுத்தை, மான், காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக விளங்குகின்றன. வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை உள்ளிட்ட வன விலங்குகள் வனத்தை ஒட்டிய கிராமப் பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். இரவு நேரங்களில்தான் அதிகளவில் வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும்.
இந்நிலையில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. வனத்தை ஒட்டிய பகுதிகளில் வாகன இரைச்சல்கள் இல்லாததால் அமைதியான சூழல் நிலவுகிறது. இதனால் வனத்தை ஒட்டிய கிராமப் பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. யானை உள்ளிட்ட வன விலங்குகள் பகல் நேரங்களிலேயே உலா வரத் துவங்கியுள்ளன.
கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது, மருதமலை முருகன் கோவில். முருகனின் ஏழாவது படை வீடாக கருதப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், வனத்தை ஒட்டிய மலைப்பகுதியில் அமைந்துள்ளது. மருதமலை அடிவாரத்தில் இருந்து சாலை மார்க்கமாகவும், நடைபாதை மார்க்கவும் கோவிலுக்கு செல்ல முடியும். மலையின் மீது படியேறி நடந்து செல்லும் படுக்கட்டுகளில் வலசை செல்லும் காட்டு யானைகளை அவ்வப்போது பார்க்க முடியும்.
இந்நிலையில் மருதமலை பகுதிக்கு இன்று மாலை இரண்டு குட்டிகளுடன் கூடிய 5 யானைகள் கூட்டம் வந்துள்ளது. மருதமலை கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளின் மீது யானைகள் சிறிது நேரம் நின்றிருந்தன. அப்போது அங்கே இருந்த நபர்கள் யானைகள் வரும் காட்சிகளை செல்போனில் படம் பிடித்துள்ளனர். அதில் ஒவ்வொரு யானைகளாக காட்டிற்குள் இருந்து வந்து படிக்கட்டுகளில் நிற்பதும், குட்டிகளை சுற்றி யானைகள் பாதுகாப்பு அரணாய் நிற்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. ஆட்களின் சத்தம் கேட்டதால் திரும்பிச் சென்ற யானைகளை அங்கிருந்தவர்கள், ‘இப்படிப் போ. இப்படி’ என படிக்கட்டுகளை கடந்து செல்லுமாறு கூறுவதும் பதிவாகியுள்ளன. சிறிது நேரம் அப்பகுதியில் நின்றிருந்த யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்து இருப்பதால், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பகல் நேரங்களிலேயே வன விலங்குகள் உலா வரத் துவங்கியுள்ளன. இதனால் ரோந்துப் பணிகளை அதிகப்படுத்தியுள்ளோம். மருதமலை முருகன் கோவிலுக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம். இதேபோல வனத்தை ஒட்டிய பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.