(Source: ECI/ABP News/ABP Majha)
கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது - எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு
"தமிழகத்தில் தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகிறது. இதனை திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது. பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை"
மின்சார கட்டணம் உயர்வை கண்டித்தும், நியாயவிலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை நிறுத்த திமுக அரசு முயற்சிப்பதாகவும் கூறி அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்சுணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் உட்பட பல்வேறு கூட்டணி அமைப்பினர் பொதுமக்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும் நியாய விலை கடைகளில் பொருட்களை வழங்க வலியுறுத்தியும், திமுகவை கண்டித்தும் பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே ஆர் ஜெயராம் மற்றும் அம்மன் அர்சுணன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
அதிமுக ஆர்ப்பாட்டம்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அம்மன் அர்சுணன், ”தமிழக மக்களுக்காக பாடுபடக்கூடிய ஒரே இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான். அனைவருக்கும் மின் கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலைகள் இன்றைய நாட்களில் நஷ்டத்தில் இயங்குகிறது. தீபாவளிக்கு போனஸ் கொடுப்பது போல் திமுக அரசு மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தி போனஸ் வழங்கியுள்ளது. தமிழகத்தில் அனைத்து வரியையும் உயர்த்தி விட்டார்கள். காய்கறிகள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்த்தப்பட்டு விட்டது. இந்த ஆட்சி கூடிய விரைவில் வீட்டுக்கு போக வேண்டும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் பத்து நாட்களில் பேருந்து கட்டணத்தின் விலையை ஏற்ற போகிறார்கள். தொழில்கள் அனைத்தும் முடங்கி உள்ளது. இதற்கெல்லாம் காரணம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தான்” எனத் தெரிவித்தார்.
எஸ்.பி. வேலுமணி பேட்டி
இதேபோல பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கோவை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் பொதுமக்களை வஞ்சிக்கும் விதமாக திமுக அரசு சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் போன்றவற்றை உயர்த்தியதால், தமிழக மக்கள் சிரமப்படுகின்றனர். தமிழகத்தில் மீண்டும் வருகின்ற 2026 ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும். தமிழகத்தில் தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகிறது. இதனை திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது. பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆகவே தமிழக மக்கள் 2026 அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தாமோதரன், அமுல் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.