கோவையில் 71 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட மதுக்கடைகள் : மதுப்பிரியர்கள் செய்த அதகளங்கள்..!
கோவை மாவட்டத்தில் உள்ள 293 டாஸ்மாக் கடைகளிலும் இன்று திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது.
கோவையில் 71 நாட்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கடை முன்பு பட்டாசு வெடித்தும், கற்பூரம் ஏந்தி தேங்காய் உடைத்தும் மதுப் பிரியர்கள் கொண்டாடினர். அதே சமயம் பல கடைகளிலும் எதிர்பார்த்த அளவு கூட்டமின்றி மதுக்கடைகள் காணப்படுகின்றன.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதில் பாதிப்பு அதிகம் இருந்த கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி உட்பட 11 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தது. கோவை மற்றும் அதன் அண்டை மாவட்டங்கள் அனைத்திலும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் பலர் திண்டுக்கல் திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் இருந்தும் மதுபாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன. மதுப்பிரியர்கள் அதிக விலை கொடுத்து கள்ளச் சந்தையில் மது வாங்கிக் குடிக்கவும் செய்தனர்.
இந்த சூழலில், அனைத்து மாவட்டங்களுக்கும் நாளை முதல் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோவை உட்பட 11 மாவட்டங்களிலும் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படத் தொடங்கியுள்ளன. மதுபானக் கூடங்கள் இயங்காது என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. கோவை மாவட்டத்தில் உள்ள 293 டாஸ்மாக் கடைகளிலும் இன்று திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மதுக்கடைகள் திறப்பை கொண்டாடும் வகையில் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு சில மது பிரியர்கள் தேங்காயில் கற்பூரம் வைத்து கடைக்கு சுற்றி தேங்காய் உடைத்து, வழிபட்டு மது பானங்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
இதேபோல உக்கடம் - சுங்கம் புறவழிச்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு மது பிரியர்கள் சிலர் மது பாட்டிலில் ராக்கெட்டுகள் விட்டும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி பண்டிகை போல கொண்டாடி மகிழ்ந்தனர்.
71 நாட்களுக்குப் பிறகு, கோவையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது மது பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதே சமயம் நீண்ட நாட்களுக்குப் பிறகு டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதால், அதிக கூட்டம் வருமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான கடைகளும் எந்த வித கூட்டமுமின்றி காலியாக காணப்படுகிறது. ஓரிருவர் மட்டுமே மதுபானங்களை வாங்க வந்து செல்கின்றனர். அனைத்து கடைகளிலும் குறைந்த அளவிலான கூட்டமே காணப்படுகிறது. வாரத்தின் முதல் நாள் என்பதால், கூட்டம் குறைவாக இருப்பதாகவும், மாலையில் கூட்டம் வரும் என எதிர்பார்ப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.