13 ஆவது தொடரும் ஆப்ரேசன் டி23 - போக்கு காட்டி வரும் புலியின் தேடுதல் வேட்டை தீவிரம்..!
மசினகுடி வனப்பகுதியில் டி 23 புலி தென்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் டி 23 என பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வருகிறது. உடலில் ஏற்பட்டுள்ள காயத்துடன் காட்டை விட்டு வெளியேறிய அந்த புலி, தேயிலைத் தோட்டங்களில் நடமாடி வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் தேவன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்ற நபர் புலி தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து சிங்காரா பகுதிக்கு புலி இடம் பெயர்ந்த நிலையில், குறும்பர் பாடி என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மங்கள பசவன் என்றவரை புலி கடித்து கொன்று, உடல் பாகங்களையும் சாப்பிட்டது.
புலி நடமாட்டம் காரணமாக கூடலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், புலியை பிடிக்கக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டி23 புலி இதுவரை 4 மனிதர்களையும், 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக கூறும் உள்ளூர் மக்கள், புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே சுட்டுக் கொல்லக் கொள்ளாமல் உயிருடன் பிடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். புலியைத் தேடும் பணியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில வனத்துறையினர், தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்டோரும் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புலி தேடுதல் வேட்டையில் 2 கும்கி யானைகள், 3 மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன. 3 ட்ரோன்கள் மற்றும் அதி நவீன கேமராக்கள் மூலம் புலி இருப்பிடத்தை தேடும் பணிகள் நடைபெற்றன. இருப்பினும் புலி பிடிபடாமல் சுற்றி வருகிறது. இதன் காரணமாக வனத்துறையினர் அடிக்கடி புலியை பிடிக்கும் வியூகங்களை மாற்றி வருகின்றனர்.
முதுமலை சரணாலயம் புலிகள் மறைந்து வாழும் அளவிற்கு புதர்மண்டி காணப்படும் சரணாலயம் என்பதாலும், அதிகளவிலான புலிகள் அப்பகுதியில் இருப்பதாலும் டி 23 புலியை பிடிப்பதில் வனத்துறையினருக்கு பல்வேறு சவால்களும், சிக்கல்களும் ஏற்பட்டு வருகின்றன. மேலும் தொடர் மழை காரணமாகவும் புலியை பிடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே வனப்பகுதியில் பரண் அமைத்து கால்நடை மருத்துவர், வனத்துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் குழுக்களாக புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் புலியை பிடிக்கும் பணியில் இன்று 13 வது வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மசினகுடி வனப்பகுதியில் டி 23 புலி தென்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.