நீலகிரி: முதுமலை யானைகள் முகாமில் குட்டி யானை உயிரிழப்பு ; வனத்துறையின் விளக்கம் என்ன?
”ஒவ்வாமை காரணமாக வயிற்றுபோக்கு ஏற்பட்டு இறந்திருக்க கூடும். உடற்கூராய்விற்கு பின்னர் முழுமையான காரணம் தெரிய வரும்”
நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் கிராமப்பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டவும், பிடிக்கவும் பயிற்சி பெற்ற கும்கி யானைகள், தாயைப் பிரிந்து பரிதவிக்கும் நிலையில் மீட்கப்படும் குட்டி யானைகள் உள்ளிட்டவை முதுமலை யானைகள் முகாமில் பாரமரிக்கப்பட்டு வருகின்றன. அங்கு காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெல்லி ஆகியோர் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.
தாயை பிரிந்து உடம்பில் பல காயங்களுடன் இருந்த ஒரு குட்டி யானைக்கு ரகு எனப் பெயரிட்டு பொம்மனும், அவருக்கு துணையாக வரும் பெல்லியும் வளர்த்து வந்தனர். ஆசனூர் வனப்பகுதியில் மிகவும் பலவீனமாக நிலையில் மீட்கப்பட்ட அம்மு என்ற குட்டி யானைக்கு பொம்மி என பெயரிடப்பட்டு, அந்த யானையை பராமரிக்கும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை மையமாக வைத்து பழங்குடிகளின் வாழ்வியலையும், அவர்களுக்கும் யானைகளுக்கும் இருக்கும் உறவையும் மிகவும் உணர்வுப்பூர்வமாக எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் பதிவு செய்திருந்தது. இந்த படத்தை கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கியிருந்தார். இந்த நிலையில் சிறந்த ஆவணப்படம் என்ற பிரிவில் ஆஸ்கர் விருதை வென்று அசத்தியது. அதேசமயம் ரகு, பொம்மி ஆகிய யானைகள் வளர்ந்து விட்ட நிலையில், அவற்றை பராமரிக்கும் பொறுப்பில் இருந்து பொம்மன், பெல்லி இருவரும் விடுவிக்கப்பட்டனர். ஆஸ்கர் விருது இப்படம் வென்றதை அடுத்து, மீண்டும் அவர்களிடமே அந்த யானைகளை பராமரிக்கும் பொறுப்பை வழங்க வேண்டுமென பலரும் கருத்து தெரிவித்தனர்.
இதனிடையே தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கோடுபட்டி வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த குட்டி யானை, 30 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.. இந்த யானையை மீட்ட வனத்துறையினர் முதலுதவி சிகிச்சை அளித்து, வனப்பகுதியில் உள்ள காட்டு யானை கூட்டத்துடன் சேர்ப்பதற்கு முயற்சி செய்தனர். இந்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், கடந்த 17 ம் தேதியன்று அந்த யானை முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த யானையை பராமரிக்கும் பொறுப்பை பொம்மன், பெல்லி ஆகியோரிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த யானையை இருவரும் பராமரித்து வந்தனர். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக குட்டி யானை உயிரிழந்தது.
இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் கூறும்போது, "பொதுவாக யானை குட்டிகளுக்கு மனிதர்கள் உட்கொள்ளும் லேக்டோஜன் பால்பவுடரை தான் உணவாக அளிக்கிறோம். இந்த லேக்டோஜினை செரிப்பதற்கான என்சைம் யானைகளில் சுரப்பது மிகவும் குறைவு. முக்கியமாக அம்மாக்களினால் கைவிடப்பட்ட இந்த மாதிரி குட்டிகளுக்கு இந்த என்சைம்கள் சுரப்பது மிக மிக குறைவு. எனவே லேக்டோஜன் செரிமானம் ஆகாமல் சிறிது சிறிதாக உடலில் சேகரமாகும். இந்த மாதிரி லேக்டோஜன் சேகரமாவது திடீரென்று ஏற்படும் டையேரியா மூலம் தான் நமக்கு தெரிய வரும்.
அப்போதுதான் டையேரியா தொடர்ச்சியாக இருக்கும். அதற்கு முன்னால் இதனுடைய அறிகுறி வெளியே தெரியாது. ஆனால் குட்டி ஆக்டிவாகத் இருக்கும். நன்றாக விளையாடும். இந்த குட்டியும் இதே போல் தான் இருந்தது. இந்த லாக்டோஜன் செரிமானம் ஆகாமல் சேகரமாகி ரத்தத்தில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி அதனால் திடீரென்று டையேரியவாக போகும். அவ்வாறு தான் இந்த குட்டிக்கும் தீடீரென்று நேற்று மதியம் டையேரியா ஏற்பட்டிருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். அவர்களின் அறிவுரை படி மருந்துகள் குளுகோஸ் மூலம் கொடுக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி யானை குட்டி இரவு 1 மணி அளவில் இறந்து விட்டது. ஒவ்வாமை காரணமாக வயிற்றுபோக்கு ஏற்பட்டு இறந்திருக்க கூடும். உடற்கூராய்விற்கு பின்னர் முழுமையான காரணம் தெரிய வரும்” எனத் தெரிவித்தார்.