கோவை, நீலகிரியில் இன்றும் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் நேற்று 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் சோலையாறு பகுதியில் 14.9 செ.மீ மழையும், சின்னக்கல்லார் பகுதியில் 11 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
![கோவை, நீலகிரியில் இன்றும் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு Meteorological Department has announced Heavy rain will continue in Nilgiris and Coimbatore கோவை, நீலகிரியில் இன்றும் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/10/78dfbd71a5fc54ed0eccf17d03cc100c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி, பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரளத்தை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கடந்த இரண்டு வார காலமாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் கோவை மாநகர பகுதிகளில் பரவலாக மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிரது. தொடர் மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப் பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் மற்றும் கவியருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.
நிரம்பிய சோலையாறு, பில்லூர் அணைகள்
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சின்னக்கல்லார், சோலையார், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மண் சரிவினால் வீடுகளும் இடிந்து சேதமடைந்துள்ளன.
இதனிடையே தொடர் மழை காரணமாக சோலையாறு அணை இன்று இரண்டாவது முறையாக நிரம்பியுள்ளது. அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில், 9520 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல மற்ற அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. 100 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியுள்ளது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. எனவே பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நீலகிரியில் தொடர் கனமழை
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், அவலாஞ்சி, தேவலா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. தொடர் மழை காரணமாக மாயாறு, மங்குழி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
கூடலூர் அருகேயுள்ள மங்குழி பகுதியில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றுப்பாலம் உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.. பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். பாலத்தை சீரமைக்கும் பணிகளில் கூடலூர் நகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கனமழை எச்சரிக்கை
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் நேற்று 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் சோலையாறு பகுதியில் 14.9 செ.மீ மழையும், சின்னக்கல்லார் பகுதியில் 11 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)