கோடநாடு வழக்கில் திடீர் திருப்பம்; இண்டர்போல் உதவியை நாடும் சிபிசிஐடி - காரணம் என்ன?
ஓராண்டுக்கு மேலாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு பங்களாவில் 2017 ஆம் ஆண்டு 11 பேர் கொண்ட கும்பலால் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டது. ஓம் பகதூர் என்ற காவலாளியை கொலை செய்த அக்கும்பல், சில மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்து சென்றது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில், மற்ற 10 பேர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளனர். இந்த வழக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் மற்றும் சிபிசிஐடி தரப்பில் ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான காவல் துறையினர் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் ஜித்தின் ஜாய், வாளையார் மனோஜ், உதயகுமார் ஆகிய 3 பேர் ஆஜராகினர். இந்த வழக்கில் விசாரணை துவங்கியதும் அரசு வழக்கறிஞர்கள் சார்பில் கோடநாடு வழக்கின் விசாரணையின் தற்போதைய நிலை குறித்து நீதிபதியிடம் தெரிவித்தனர். அப்போது குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் பத்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜித்தின் ஜாய் வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்தார். இதற்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் தரப்பில் விசாரணை நிபுணர் குழு கோடநாடு பங்களாவில் ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையின் நகலை குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞருக்கு வழங்குவது குறித்து அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இண்டர்போல் உதவியுடன் விசாரணை
குறிப்பாக கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் இறப்பதற்கு முன்பு 7 முறை வெளிநாட்டிலிருந்து தொலைபேசி மூலம் அழைப்பு வந்துள்ளதாகவும், இதனை இண்டர்போல் காவல் துறை உதவியுடன் விசாரித்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாகன விபத்து குறித்து அந்த அறிக்கையில் உள்ளதால், இதுபோன்ற புலன் விசாரணை நடைபெறும் நேரத்தில் எதிரிகளுக்கு நிபுணர் குழு நகலை வழங்கினால் புலன் விசாரணை பாதிக்கப்படும் என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அப்துல் காதர் வழக்கை ஜூலை மாதம் 26-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் விஜயன் கூறுகையில், ”இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 வது குற்றவாளியான ஜித்தின்ஜாய் நீதிமன்றத்திற்கு நேரில் வருவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். அதற்கு அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. கோடநாடு பங்களாவை நீதிபதிகள் முழுமையான ஆய்வு செய்ய வேண்டும் என தாங்கள் கொடுத்திருந்த மனுவிற்கு புலன் விசாரணை நடைபெறும் போது கோடநாடு பங்களாவில் ஆய்வு மேற்கொள்ள முடியாது எனவும், கோடநாடு பங்களாவில் முழு ஆய்வு செய்தால் உண்மையான குற்றவாளியார் எனத் தெரியவரும்” எனத் தெரிவித்தார் .