தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள்: அதிரடி கண்காணிப்பில் போலீஸ் - கோவையில் நடப்பது என்ன?
கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து 6 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காந்திபுரம் அருகே உள்ள சித்தாபுதூர் பகுதியில் பாஜக கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில், இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டை வீசினர். பெட்ரோல் குண்டு வெடிக்காததால், அசாம்பாவிதங்கள் மற்றும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதேபோல ஒப்பணக்கார வீதியில் வட மாநிலத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான மாருதி என்ற துணிக்கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் கடையின் முன்பாக இருந்த அட்டை மீது விழுந்து தீப்பற்றிய நிலையில், கடையில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.
கோவை பாஜக ரத்தினபுரி பகுதி மண்டல தலைவராக மோகன் என்பவர், காந்திபுரம் நூறடி சாலையில் மோகன் வெல்டிங் அசஸரிஸ் என்ற கடை நடத்தி வருகிறார். இவரது கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், அது வெடிக்காததால் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இதேபோல கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் மதன் குமார், சச்சின் உள்ளிட்டோருக்கு சொந்தமான பிளைவுட் கடையில் பின்புற ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. சில பிளைவுட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் பா.ஜ.க. நிர்வாகிகள் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணி வார்டு பொறுப்பாளர் சரவணக்குமார் ஆகியோரின் கார் மற்றும் ஆட்டோ கண்ணாடிகளை அடையாளம் தெரியாத நபர்கள் கோடாரியால் உடைத்துள்ளனர். மேலும் கார் மற்றும் ஆட்டோக்களை டீசல் ஊற்றி எரிக்க முயற்சி செய்துள்ளனர். கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தியாகு என்ற இந்து முன்னணி அமைப்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினரின் காரின் மீது, அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியோடினர்.
கோவைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன். இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உப அமைப்பான சமஸ்கிருத பாரதி அமைப்பின் தமிழக - கேரள பொறுப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றனர். ஆனால் பெட்ரோல் குண்டு வெடிக்காததால் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.. இதேபோல குனியமுத்தூர் சுப்பு லட்சுமி நகர் பகுதியில் பாஜகவை சேர்ந்த பரத் என்பவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைந்து தீப்பற்றி எரிந்துள்ளது. சத்தம் கேட்டு வந்தவர்கள் தீயை அணைத்ததால் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.
இதனிடையே சாய்பாபா கோவில் சன் ரைஸ் பர்னிச்சர் என்ற காம்ப்ளக்ஸ் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று, நேற்றிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அந்த வாகனம் முழுமையாக எரிந்து சேதம் அடைந்தது. இந்நிலையில் இரு சக்கர வாகனம் தீப்பிடித்து எரிவது குறித்து தகவல் அறிந்த சாய்பாபா காலனி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து இரு சக்கர வாகனத்தை மீட்டனர். இரு சக்கர வாகனம் விபத்தி காரணமாக தீ பிடித்து எரிந்ததா அல்லது வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் கோவையில் முகாமிட்டு பணிகளை கண்காணித்து வருகிறார். மேலும் கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கருமத்தம்பட்டி பகுதியில் இரவு நேரத்தில் வாகன சோதனையானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.. கோவை மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனை , கண்காணிப்புக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றது. துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றில் வருபவர்களை நிறுத்தி பெயர்கள், வாகன எண் உள்ளிட்டவற்றை பதிவு செய்த பின்னரே அனுமதித்து வருகின்றனர். இதேபோன்று கோவை நகர் பகுதியிலும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்