கோவையில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிப்பு; மின்மயானங்களில் காத்திருக்கும் உடல்கள்
மின் மயானத்தில் இடைவெளி இன்றி காலை முதல் மாலை வரை தொற்றால் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. அடுத்தடுத்து அமரர் ஊர்தியில் கொண்டு வரப்படும் சடலங்கள் வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டு, ஒவ்வொறு சடலமாக தகனம் செய்யப்பட்டு வருகின்றது.
கோவையில் கொரானா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எரியூட்டுவதற்காக மின் மயானங்களில் வரிசையாக அடுக்கி வைத்து காத்திருக்கும் சூழல் நிலவுகின்றது.
கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கொரொனா தொற்றின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், நாள் ஒன்றுக்கு3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகி வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை ஒரு இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பால், கோவையில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. கோவை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் சுமார் 23 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்று பாதித்தவர்கள் பெரும்பாலானோருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிசன் வசதி கொண்ட படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரியாக தினமும் 15 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.
இதன் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறை நிரம்பியுள்ளது. தொடர்ந்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அளவுக்கு அதிகமான சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. மின்மயானங்களில் உடல்களை தகனம் செய்ய தாமதம் ஏற்பட்டு வருவதால், அரசு மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள மின் மயானத்தில் இடைவெளி இன்றி காலை முதல் மாலை வரை தொற்றால் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டபடுகின்றன. அடுத்தடுத்து அமரர் ஊர்தியில் கொண்டு வரப்படும் சடலங்கள் வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டு, ஒவ்வொறு சடலமாக தகனம் செய்யப்பட்டு வருகின்றது. இதனால் மின்மயானம் இருக்கும் பகுதி புகையை வெளியிட்டபடி இருக்கின்றது. கொரானாவால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தங்களது உறவினரின் சடலத்தை மின்மயானத்தில் தகனம் செய்து வருகின்றனர்.
ஒரே இடத்தில் உறவினர்களாலும், அடுக்கி வைக்கப்படும் உடல்களாலும் நோய் தொற்றுக்கள் பரவும் சூழலும் நிலவுகின்றது. இதே சூழல் தான் கோவையில் மற்ற மின்மயானங்களிலும் நீடிக்கிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் அவற்றை தகனம் செய்ய நடவடிக்கைகள் எடுப்பதுடன், ஊரடங்கை இன்னும் கடுமையாக்க வேண்டும் என இறந்தவர்களின் உறவினர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும் சடலங்களை தகனம் செய்ய கூடுதல் வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்த வேண்டுமென உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் கோவையில் பல இடங்களில் அதிக ஓலமே கேட்கிறது.