TTF Vasan : TTF வாசன் மீது கோவை காவல் துறையினர் வழக்குப் பதிவு: காரணம் என்ன?
தனியார் யூடியூப் சேனல் செய்தியாளரை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக காரமடை காவல் நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது தனியார் யூடியூப் சேனல் செய்தியாளரை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக காரமடை காவல் நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வெள்ளியங்காடு வாட்டர் போர்டு பகுதியைச் சேர்ந்த டிடிஎப் வாசன் என்ற வைகுண்ட வாசன் (25). Twin throttlers என்ற யூடியூப் சேனலை டிடிஎப் வாசன் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு, சாகசங்கள் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். இவருக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்கள் இருக்கும் நிலையில், கடந்த ஜூலை மாதம் தன்னுடைய பிறந்தநாளை கோவை தனியார் விடுதியில் தனது ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் கொண்டாடினார். அவருக்கு கூடிய கூட்டத்தை கண்டு பொதுமக்கள் மிரண்டனர். இணையத்தில் சரமாரியாக டிடிஎஃப் வாசன் மீது விமர்சனம் எழுந்தது.
இவரது பைக் ஸ்டண்டுகள், நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டுவது என இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதாக சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்ட டிடிஎஃப் வாசன், தான் பயிற்சி எடுத்துக் கொண்டே இத்தகைய ஸ்டண்டுகளில் ஈடுபடுவதாகவும், அதிவேகமாக பைக் ஓட்டியதாக சொல்லப்பட்ட வீடியோ ஜமுனா ஹைவேஸ் சாலையில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனால் அப்பிரச்சனை முடிவுக்கு வந்ததாக நினைத்திருந்த நிலையில் மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கினார். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த மரக்கடை அதிபரும், பிரபல யூட்யூபருமான ஜி.பி.முத்துவை சந்தித்த டிடிஎப் வாசன், அவரை பைக்கில் அமர வைத்து வாகன நெருக்கடி நிறைந்த சாலையில் 150 கி.மீ.க்கு மேலான வேகத்தில் சென்றார். இது தொடர்பாக சூலூர், போத்தனூர் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டிடிஎப் வாசன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் பிரபல தனியார் யூடியூப் செய்தி சேனலான இந்தியா கிளிட்ஸ் செய்தியாளர் அய்யப்பன் ராமசாமி என்பவரை தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுக்கும் அவரது யூடியூப் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், ”45 ஆயிரம் பணம் வாங்கிட்டு, திரியுறவன எல்லாம் விட்டுறுவானுங்க. அந்த நாய்க்கு மரியாதையே கிடையாது. வெறியோட வெயிட் பண்றேன். கைல சிக்கனா மூஞ்சி முகரை எல்லாம் உடைப்பேன்” என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக காரமடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயராஜ் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் டிடிஎப் வாசன் மீது இரண்டு பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அய்யப்பன் ராமசாமி பேட்டி எடுத்த போது அவரது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் டிடிஎப் வாசன் பாதியில் கிளம்பிச் சென்றதும், தற்போது அய்யப்பன் ராமசாமி பணம் வாங்கியதாக சர்ச்சையில் சிக்கிய நிலையில் அதற்கு பதிலடியாக டிடிஎப் வாசன் வீடியோ வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்