(Source: ECI/ABP News/ABP Majha)
ஆகஸ்ட் 6 ம் தேதி கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு தேர்தல் ; புதிய மேயர் யார்?
கோவை மாநகராட்சி மேயராக இருந்த திமுகவை சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் இரண்டே ஆண்டுகளில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் திமுகவின் முதல் மேயர் ஆகிய சிறப்புகளுடன் பதவியேற்ற கல்பனா ஆனந்தகுமார் இரண்டே ஆண்டுகளில் தனது பதவியை ராஜினாமா செய்தார். கல்பனா பதவியேற்ற போது எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர், பேருந்தில் சென்னை சென்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தவர் ஆகிய நேர்மறையான அவரது பிம்பங்கள், மேயராக பதவியேற்ற பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்தது. மேயராக பொறுப்பேற்றவுடன் திமுக கட்சி நிர்வாகிகளை மதிக்காமல் செயல்பட்டது, மாநகராட்சி மண்டல தலைவர்களுடன் இணக்கமாக இல்லாமல் மோதல் போக்குடன் செயல்பட்டது, நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் முறையாக வேலை பார்க்காமல் இருந்தது உள்ளிட்ட தொடர் புகார்கள் எழுந்தன. கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் சந்தை வசூல் செய்தது, ஒப்பந்ததாரர்களிடம் கமிசன் கேட்டது, பக்கத்து வீட்டை பெண்ணை காலி செய்ய தொல்லை கொடுத்தது என அடுத்தடுத்து சர்ச்சைகளிலும் சிக்கினார். இதன் காரணமாக அவரை ராஜினாமா செய்ய கட்சி தலைமை அறிவுறுத்தியது. இதனையடுத்து உடல் நிலை மற்றும் குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
ராஜினாமா ஏற்பு
மேயர் கல்பனா ராஜினாமா கடிதம் கொடுத்த பின்னர், கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், திமுக, அதிமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமா, விவாதமின்றி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. அப்போது கல்பனா மேயர் பதவியை மட்டுமே ராஜினாமா செய்திருப்பதாகவும், கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யவில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் தேதி அறிவிப்பு
காலியாக உள்ள திருநெல்வேலி மற்றும் கோவை மாநகராட்சி மேயர் பதவியிடங்களை நிரப்ப மறைமுக தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சிகளின் கூட்டங்களை நடத்தி மேயர்களை தேர்ந்தெடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 6 ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இதையடுத்து திமுக தலைமை ஒரு வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்கும். தேர்தல் நாளில் மாமன்ற உறுப்பினர்கள் மேயரை தேர்வு செய்வார்கள். திமுக பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால், திமுக வேட்பாளர் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.