கோவையில் ஒரே நாளில் இரண்டு மேம்பாலங்கள் திறப்பு; திமுக, பாஜக கொடி அரசியலால் பரபரப்பு..!
திமுக கொடிக் கம்பங்களை எடுத்து, கையில் ஏந்தியபடி திமுக ஆதரவு முழக்கங்களை எழுப்பினர். அரசு விழா நிகழ்ச்சியில் திமுக, பாஜக தொண்டர்கள் மாறி, மாறி முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகரில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்த வரும் நிலையில், முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். அதற்கு தீர்வு காணும் வகையில் முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
கோவை - திருச்சி சாலையில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அருகே இருந்து ராமநாதபுரம் பங்குச்சந்தை அலுவலகம் வரை 238 கோடி ரூபாய் செலவில் 3 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதேபோல கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் 1.2 கி.மீ. தூரத்துக்கு 66 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலங்களில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, விபத்துகள் மற்றும் காலதாமதம் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று இந்த இரண்டு மேம்பாலங்களும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இரண்டு மேம்பாலங்களையும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ராமநாதபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கொடியசைத்து வாகன போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
இதற்கு முன்னதாக கோவை, ராமநாதபுரம் மேம்பாலம் திறப்பு விழா நிகழ்ச்சி கோயம்புத்தூர் பங்குசந்தை அலுவலகம் அருகே நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனிடையே மேம்பாலம் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வந்த பாஜக தொண்டர்கள், கட்சி கொடியுடன் ’பாரத் மாதாகி ஜெ’ என முழக்கம் எழுப்பியபடி வந்தனர். இதற்கு பதிலடியாக திமுக தொண்டர்கள் அமைச்சரை வரவேற்க நடப்பட்டு இருந்த திமுக கொடிக் கம்பங்களை எடுத்து, கையில் ஏந்தியபடி திமுக ஆதரவு முழக்கங்களை எழுப்பினர். அரசு விழா நிகழ்ச்சியில் திமுக, பாஜக தொண்டர்கள் மாறி, மாறி முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு விழா நிகழ்ச்சியில் முழக்கங்களை எழுப்பக்கூடாது என அறிவுறுத்திய நிலையிலும், தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.
அதிமுக தொண்டர்களும் கட்சிக் கொடியை வரவழைத்து கொடிகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர். அமைச்சர் செந்தில்பாலாஜி வாகன போக்குவரத்தை தொடங்கி வைத்த போதும், திமுக, பாஜக தொண்டர்கள் மாறி மாறி முழக்கங்களை எழுப்பினர். திமுக ஆட்சியில் திறக்கப்பட்ட மேம்பாலம் என திமுகவினரும், அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலம் என அதிமுகவினரும், மேம்பாலம் கட்டுமானத்தில் மத்திய அரசின் பங்களிப்பும் இருப்பதாக பாஜகவினரும் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. கோவையில் ஒரே நாளில் இரண்டு மேம்பாலங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டு இருப்பதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்