கோவை செம்மொழி பூங்கா திறப்பு: எதிர்பார்ப்பில் மக்கள்! தேதி மாற்றம் ஏன்? புதிய வசதிகள் இதோ!
கோவை செம்மொழி பூங்காவானது, ஒரு சுற்றுலா மையமாக மட்டுமல்லாமல், தமிழ் மொழியின் அடையாளமாகவும், பசுமையின் புதுமுகமாகவும் மாறப் போகிறது.
கோவை நகரத்தின் மையப்பகுதியில், உருவாகி வரும் செம்மொழி பூங்கா பாரம்பரியமும் பசுமையும் கலந்த நவீனத்துவத்துடன் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழின் செம்மொழிப் பெருமையை பிரதிபலிக்கும் விதமாகவும், இயற்கையோடு மனிதன் மீண்டும் இணைவதற்கான ஒரு தளமாகவும் இப்பூங்கா உருவாகி வருவதால், கோவையின் புது அடையாளமாக மாறும் என்று கூறப்படுகிறது.
கோவை மாநகரின் நடுப்பகுதியில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த பூங்கா, பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகில் உருவாகி உள்ளது. இதை அமைப்பதற்கான செலவு சுமார் ரூ.170 கோடி என தகவல் தெரிவிக்கின்றன. மேலும், 2வது கட்டமாக 120 ஏக்கர் பரப்பளவில் விரிவுப்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோவையில் கடந்த 2010-ம் ஆண்டு உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்றது. அப்போது, இம்மாநாட்டை நினைவு கூறும் வகையில், அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி, கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, கடந்த 2021 ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலின் அறிப்பு வெளியிட்டு, செம்மொழி பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார். பின்னர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெண்டர் விடப்பட்டு, பணிகளானது விரைவுபெற்றது.
இந்த பூங்கா, வெறும் ஓய்வுக்காக மட்டுமல்லாமல், கற்றலும் அனுபவமும் கலந்து மக்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இதில் 16 வகையான தோட்டங்கள் மற்றும் 3 வகையான வனங்கள் முக்கிய அம்சங்களாக உள்ளன. இதுதவிர இயற்கை அருங்காட்சியகம், 1000 பேர் அமரும்வகையில் மாநாட்டு மையம், சிறுவர் விளையாடும் பொழுது போக்கு மையம், திறந்த வெளிஅரங்கு, இயற்கை உணவகம், நர்சரி தோட்டம், வாகனநிறுத்தம் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலான பூங்காவுக்குள் நடைபாதைகள், உடற்பயிற்சி கூடங்கள், விழா மண்டபங்கள், வெளிநாடுகளின் தோட்ட மாதிரிகள், சிறுவர் விளையாட்டு பகுதி, விசிட்டர்கள் சென்டர், குளிரூட்டிய அரங்குகள், உணவகம், மற்றும் வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல வசதிகள் இருக்கும்.
கோவை செம்மொழி பூங்காவின் பணிகள் துரிதமாக நடைப்பெற்று 2025 ஜூன் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால் இல்லை. இருந்தாலும் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய இந்தப் பூங்கா டிசம்பர் 1 ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போதும் அது தள்ளிப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள், இறுதிக்கட்டப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்த செம்மொழி பூங்காவானது, ஒரு சுற்றுலா மையமாக மட்டுமல்லாமல், தமிழ் மொழியின் அடையாளமாகவும், பசுமையின் புதுமுகமாகவும் மாறப் போகிறது மட்டுமல்லாமல். பாரம்பரியம், அறிவியல், இயற்கை அனைத்தும் ஒன்றாக இணையும் இடமாக இந்த செம்மொழி பூங்கா இருக்கும் என்றும் தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதனால், பயன்பட்டிற்கு வரும் மெம்மொழி பூங்காவை கோவை மக்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர்.





















