கோவை : நள்ளிரவில் எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி ; வெளியான சிசிடிவி காட்சிகள்..!
கல்லால் தாக்கி உடைக்க முயன்றதும், அது திறக்காததால் ஆத்திரமடைந்த அவர் ஏடிஎம் எயந்திரத்தின் மானிட்டரை கல்லால் தாக்கி உடைத்து விட்டு தப்பிச்சென்றதும் தெரியவந்தது.
கோவையில் நள்ளிரவில் எஸ்.பி.ஐ. ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஏடிஎம் மையங்களில் பல்வேறு நூதன முறையில் கொள்ளையடிப்பது, இயந்திரங்களை உடைத்து கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோவையில் மக்கள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரத்தில் எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கோவை செல்வபுரம் சிவாலயா தியேட்டர் அருகே ராமமூர்த்தி சாலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்திற்குள் நள்ளிரவு 2 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைந்துள்ளார். 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் கைகளில் கற்களை எடுத்துக்கொண்டு வந்துள்ளார். பின்னர் கையில் வைத்திருந்த கற்களால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். இந்த தகவல் ஏடிஎம் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டு இருந்த ஐதராபாத்தில் உள்ள வங்கி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து வங்கி அதிகாரிகள் உடனடியாக செல்வபுரம் காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். உடனடியாக காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
பின்னர் காவல் துறையினர் ஏ.டி.எம். எந்திரத்தை ஆய்வு செய்தனர். அப்போது ஏடிஎம் எந்திரத்தில் கீழ் பகுதியை அந்நபர் கல்லால் தாக்கி உடைக்க முயன்றதும், அது திறக்காததால் ஆத்திரமடைந்த அவர் ஏடிஎம் எயந்திரத்தின் மானிட்டரை கல்லால் தாக்கி உடைத்துவிட்டு தப்பிச்சென்றதும் தெரியவந்தது. இதில் பணம் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை என்பது உறுதியானது. இதனை அடுத்து ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில் அந்த நபரின் முகம் பதிவாகியுள்ளது. மேலும் ஏடிஎம் எந்திரத்தை கல்லால் தாக்கி உடைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து செல்வபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட முயன்ற நபரின் புகைப்படத்தை வைத்து அந்த நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரின் புகைப்படத்தையும் காவல் துறையினர் வெளியிட்டு உள்ளனர்.
வங்கி ஏடிஎம்களில் தொடர்ந்து கொள்ளை, கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்து வந்தாலும், பல இடங்களில் ஏடிஎம் மையங்களில் இரவு நேரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இரவு நேர காவலாளிகளை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.