கோவையில் துப்பாக்கியால் சுட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை - ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தாரா..?
விசாரணையில் கடன் பிரச்னை காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஆன்லைன் ரம்மி மூலமும் பணத்தை இழந்தாரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் அரசு பொருட்காட்சியில் வயிற்றில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறை துறைக்கு சொந்தமான இடத்தில், அரசுப் பொருட்காட்சி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சியில் வேளாண்மை துறை கண்காட்சி, கால்நடைத் துறை கண்காட்சி மற்றும் கோவை மாநகர காவல் துறையின் கண்காட்சி என பல அரசு துறைகளின் கண்காட்சிகள் நடந்து வருகின்றன. இதில் கோவை மாநகர காவல் துறை கண்காட்சி அரங்கில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காளிமுத்து (29) என்ற ஆயுதப்படை காவலர் நேற்று பணியில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை 3: 45 மணியளவில் திடீரென மாநகர காவல் துறை கண்காட்சி அரங்கில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சென்று பார்க்கும் போது, காவலர் காளிமுத்து வயிறு மற்றும் முதுகு பகுதியில் தோட்டாக்கள் துளைத்த நிலையில் ரத்தக் காயங்களுடன் அரங்கில் இருந்து வெளியே வந்துள்ளார். காவலர் இரத்தம் வடிய வருவதை கண்ட கண்காட்சியில் இருந்த ஊழியர்கள் மற்றும் கடைக்காரர்கள் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அரசுப் பொருட்காட்சி வளாகத்தில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து விரைந்து வந்த பந்தய சாலை காவல் துறையினர் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த காயங்களுடன் இருந்த காவலர் காளிமுத்துவை, பந்தய சாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் துப்பாக்கி குண்டு வெடித்த கண்காட்சி அரங்கை, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அதேபோல தடவியல் காவல் துறையினரும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலர் காளிமுத்து, இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் காவலர் காளிமுத்து கடன் பிரச்சனை காரணமாக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பந்தயசாலை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவலர் காளிமுத்து ஆன்லைன் ரம்மி மூலமும் பணத்தை இழந்தாரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்