Sushil Hari TC: பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளில் சிக்கிய சிவசங்கர் பாபா : பெற்றோர்கள் எடுத்த முடிவு என்ன?
சிவசங்கர் பாபா பாலியல் புகாரில் சிக்கியுள்ளதால், சுஷில் ஹரி சர்வதேச பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவர்களின் பெற்றோர்கள் மாற்றுச் சான்றிதழ்களை வாங்கிச் செல்கின்றனர்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிக்கியுள்ள சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி தனிப்படை டேராடூன் விரைந்தது. புகார் கொடுத்த மாணவிகளிடம் விசாரணை நடத்தி பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். மாரடைப்பு ஏற்பட்டதால் சிவசங்கர் பாபா டேராடூனில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிவசங்கர் பாபாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க அனைத்து விதமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியில் இருந்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மாற்று சான்றிதழ் வாங்கிச் செல்கின்றனர்.
தமிழ்நாட்டில் குவியும் சுற்றுலா பயணிகள்; வீணடிக்கப்படும் கடற்கரை சுற்றுலா!
மேலும், பெற்றோர்களுக்கு, பிள்ளையை பள்ளியில் சேர்த்து விட்டோம் என்று கொஞ்சமும் அலட்சியம் வேண்டாம். கேட்கும் செய்திகளும் பகிரக்கூடியதாக இல்லை. பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் மீது அதீத கவனமும் கண்காணிப்பும் செலுத்துங்கள். அவ்வப்போது அவர்களிடம் பள்ளி நிகழ்வுகள் சார்ந்து உரையாடுங்கள்.பிள்ளைகளின் Best friend ஆக மாறுங்கள். அவர்கள் படிக்கும் இடம் மிகச் சிறந்த இடமாகவும் பள்ளிக்கூடம் இருக்கலாம். இது போன்ற மோசமான இடமாகவும் இருக்கலாம். எது ஆயினும் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் பிள்ளை படிக்கும் பள்ளியின் மற்ற பெற்றோர்களிடம் தொடர்பில் இருங்கள் என்று பல தளங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்தில் அமைந்துள்ளது தனியார் சர்வதேச உண்டு உறைவிடப்பள்ளி. இந்த பள்ளியை சிவசங்கர் பாபா என்பவர் நிர்வகித்து வருகிறார். இவர் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பள்ளியில் பயின்று வெளியேறி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும், அந்த மாணவிகள் சிவங்கர் பாபாதான் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரம் என்று கூறிக்கொண்டும், பள்ளியில் படிக்கும் மாணவிகள் பலரையும் கோபிகைகள் என்று மூளைச்சலவை செய்து அவர்களுடன் உறவில் ஈடுபட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இந்த நிலையில், மாணவிகள் அளித்த பாலியல் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருந்ததால் கடந்த 11-ஆம் தேதி பாபாவை நேரில் ஆஜராகும்படி ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிவசங்கர் பாபா தான் உத்தரகாண்ட் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தன்னால் ஆஜராக முடியாது என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீதும் மகாபலிபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் 354, 355, 363, 365 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மொத்தம் 15 புகார்கள் வந்ததாகவும் அதில் ஐந்து புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.