தமிழ்நாட்டில் குவியும் சுற்றுலா பயணிகள்; வீணடிக்கப்படும் கடற்கரை சுற்றுலா!
தமிழ்நாட்டில் பல அழகான கடற்கரைகள் அமைந்துள்ளன. அவற்றை தமிழ்நாடு அரசு இன்னும் சரியாக கையாளவில்லை. இருக்கும் ஒரு சில சுற்றுலா தலங்களை நோக்கி பயணிகள் படையெடுக்கும் போது, கடற்கரை பகுதிகளை மேம்படுத்தினால் வருவாய் எங்கோ போகும்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அனைவரும் தங்களுடைய வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. அத்துடன் உலகளவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்துள்ளது. மத்திய சுற்றுலா துறையின் தரவுகளின்படி கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த மொத்த சுற்றுலா பயணிகளின் எணிக்கை 109 லட்சமாக இருந்தது. அது 2018ஆம் ஆண்டைவிட 3.5 சதவிகிதம் அதிகமாக இருந்தது. இந்தச் சுற்றுலா பயணிகளின் மூலம் 2.11 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இந்தியாவிற்கு கிடைத்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் மத்திய சுற்றுலா துறையின் தரவுகளின்படி 2019ஆம் ஆண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். அந்தத் தரவுகளின்படி 2019ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு 68.66 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். மேலும் அதிகளவில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு 2019ஆம் ஆண்டு 49.48கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதே தரவுகளை சதவிகிதம் அடிப்படையில் பார்த்தோம் என்றால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் 21.9 சதவிகிதமும், உள்நாட்டு பயணிகள் வருகையில் 21.3 சதவிகிதமும் தமிழ்நாடு பெற்றுள்ளது.
இந்திய தீபகற்பத்தில் தென்கிழக்கு பகுதியில் தமிழ்நாடு அமைந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கடல் பகுதி சூழ்ந்துள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல வரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள், நினைவுச் சின்னங்கள், புரதான சின்னங்கள் எனப் பல அமைந்துள்ளன. அவற்றுடன் யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற 5 பாரம்பரிய சின்னங்களும் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. மாமல்லபுரம் கடற்கரை கோவில், தஞ்சாவூர்-பிரகதீசுவரர் திருக்கோயில், தாராசுரம்-ஐராவதீசுவரர் திருக்கோயில், கங்கை கொண்ட சோழபுரம், நீலகிரி மலை ரயில் ஆகியவை ஆகும்.
2019 தரவுகளின்படி மாநிலங்களின் சுற்றுலா தரவரிசை:
வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வருகை தரவரிசை | உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை தரவரிசை |
1. தமிழ்நாடு | 1. உத்தரப் பிரதேசம் |
2. மகாராஷ்டிரா | 2. தமிழ்நாடு |
3. உத்தரப்பிரதேசம் | 3. ஆந்திர பிரதேசம் |
4. டெல்லி | 4. கர்நாடகா |
5. மேற்கு வங்கம் | 5. மகாராஷ்டிரா |
இவற்றின் மூலம் தமிழ்நாடு அதிகளவில் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருவாய் ஈட்டி வருகிறது. குறிப்பாக கோவில்கள் மற்றும் இதர புராதன சின்னங்கள் மூலம் தான் சுற்றுலா வருவாய் அதிகமாக கிடைத்து வருகிறது. தமிழ்நாட்டில் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கடல் பகுதி சூழ்ந்து இருப்பதால் நல்ல கடற்கரை கொண்ட மாநிலமாக அமைந்துள்ளது. எனினும் இந்த கடற்கரைகளில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க போதிய வசதிகள் இல்லை. உதாரணத்திற்கு இவற்றில் ஆசியாவில் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினாவில் கூட மாற்றுத் திறனாளிகள் உள்ளே சென்று கடலை பார்க்கும் வசதி இல்லை. இது தொடர்பாக நீண்ட நாட்களாக மாற்றுதிறனாளிகள் அமைப்பை சார்ந்த சிலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் அங்கும் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கான எந்த ஒரு பெரிய கட்டுமானத்தை தமிழ்நாடு அரசு சரியாக செய்யவில்லை. அதேபோன்று தான் மாமல்லபுரத்தின் கடற்கரைகளும். அங்கு வெறும் ரிசார்ட்கள் மட்டும் அமைந்திருக்கின்றன.
அதேபோல் கன்னியாகுமாரி கடற்கரை உலகப் புகழ் பெற்ற திருவள்ளுவர் சிலை உள்ளது. அந்த இடத்திலும் இன்னும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டத்தை வகுக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் புதிதாக பதவியேற்றுள்ள தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் அதிகாரிகளுடம் ஆய்வு கூட்டத்தை நடத்தியுள்ளார். அதில் கொரோனா காலத்திற்கு பிறகு தமிழ்நாட்டு சுற்றுலா துறையை எப்படி மீட்டு எடுப்பது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அதில் அதிகாரிகள் கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் காவிரி கரையில் அமைந்துள்ள பூம்புகார் பகுதியை ஆகியவற்றில் உள்ள கட்டுமானங்களை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. அத்துடன் சேர்த்து புதிய அரசு தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளையும் மேம்படுத்தி அதிகளவில் கடற்கரை மூலமாக சுற்றுலா வருமானத்தை ஈட்ட வேண்டும் என்பதே சுற்றுலா ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
மேலும் படிக்க: Nagarajan IAS: ‛மிஸ்டர் கிளீன்... மிஸ்டர் கூல்...’ எங்கு சென்றாலும் மக்கள் மனதை வெல்லும் நாகராஜன் ஐ.ஏ.எஸ்!