Chennai ; போரூரில் சிறுவன் மீது பாலியல் அத்துமீறல் , அதிர்ச்சியில் உறைந்த சம்பவம்
சென்னை போரூரில் சிறுவனிடம் அத்து மீறிய டெய்லரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கடையில் நின்று கொண்டிருந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லர்
சென்னை போரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் 14 வயது மகனை அழைத்துக் கொண்டு கிளாசி டெய்லர் பேஷன் ஸ்டூடியோ என்ற கடைக்கு சென்றுள்ளார். அப்போது மழை அதிகமாக வந்த காரணத்தால் சிறுவனை கடையிலேயே காத்திருக்க வைத்து விட்டு , அந்த பெண் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், போரூர் , காரம்பாக்கம் பகுதியை சேர்ந்த டெய்லர் சிவா ( வயது 50 ) என்பவர் சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன், கடையை விட்டு மழையில் வெளியே ஓடியுள்ளார். நடந்த சம்பவம் குறித்து தன் பெற்றோரிடம் தெரிவிக்கவே , இது குறித்து சிறுவனின் தாய் , வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார் சிவாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தென் மாவட்டங்களுக்கு விற்பனை செய்ய இருந்த ரூ.7.50 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அம்பத்துார், சூரப்பட்டு அருகே உள்ள சுங்கச் சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை , சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி சோதனை செய்தனர்.
இதில் , அவர்கள் வைத்திருந்த சூட்கேசில் கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில் குன்றத்தூரைச் சேர்ந்த திலீப் குமார் ( வயது 34 ) மற்றும் விக்னேஷ் ( வயது 25 ) என தெரிந்தது. இருவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி தென் மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய இருந்தது தெரிந்தது. இருவரிடம் இருந்தும் , 7.50 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
டியூஷன் சென்ற சிறுமியை பின் தொடர்ந்து , பாலியல் சீண்டல் செய்த சிறுவன்
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த 13 வயது சிறுமி. இரண்டு ஆண்டுகளாக கொடுங்கையூரில் உள்ள ஒரு வீட்டில் டியூஷன் சென்று வருகிறார். கடந்த 16ம் தேதி மாலை டியூஷன் செல்லும் போது மர்ம நபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமி பயந்து தப்பியோட பின் தொடர்ந்த மர்ம நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை , எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், வியாசர்பாடியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
நிறுவனத்தின் கூரையை உடைத்து , 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பித்தளை தட்டுகள் திருடிய 3 பேர் கைது
சென்னை வால்டாக்ஸ் சாலை உட்வார்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி ( வயது 40 ) இவர் பாலாஜி இண்டஸ்ட்ரிஸ் என்ற பெயரில் , பித்தளை பூஜை சாமான்கள் தயார் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 14ம் தேதியன்று நிறுவனத்தை பூட்டி ஊருக்கு சென்று உள்ளார். இந்த நிலையில் நிறுவனத்தின் ஆஸ்பெட்டாஸ் கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் , பித்தளை தட்டுகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து, ஏழுகிணறு போலீசார் விசாரித்தனர். இதில், சென்னை சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்த பாலாஜி ( வயது 37 ) சுடலை மணி ( வயது 49 ) கொடுங்கையூரைச் சேர்ந்த பார்த்திபன் ( வயது 29 ) ஆகிய மூவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
போலீசார் மூவரையும் கைது செய்து, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பித்தளை தட்டுகளை பறிமுதல் செய்தனர். இதில் பாலாஜி மீது ஏற்கனவே திருட்டு வழிப்பறி உட்பட 12 வழக்குகள் உள்ளன.





















