மேலும் அறிய
Advertisement
254 உதவிப் பேராசிரியர்களின் கல்வித்தகுதியை ஆராய வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்
பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள 254 பேரின் கல்விச் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்
பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள 254 பேரின் கல்விச் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என தமிழக கல்லூரி கல்வி இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013, 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் உரிய தகுதியை பெற்றிருக்கவில்லை எனவும், தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
அறக்கட்டளையை நிர்வகித்த ஓய்வுபெற்ற நீதிபதி, 152 உதவிப் பேராசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதுசம்பந்தமான வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கடந்த 2013, 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேராசிரியர்களின் கல்வித்தகுதியை ஆராய வேண்டும் எனக் கூறி, இவர்களின் கல்விச் சான்றுகளை பெற்று சரிபார்க்கும்படி கல்லூரி கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டார்.
சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை முடித்து நவம்பர் 14ம் தேதி விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய கல்லூரி கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
அந்த உத்தரவில், தகுதியற்ற கல்லூரி ஆசிரியர்களை நியமித்தால் மாணவர்கள் தான் பாதிக்கப்படுவர் எனத் தெரிவித்த நீதிபதி, கல்லூரி ஆசிரியர்கள் கல்வித் தகுதி விஷயத்தில் எந்த அனுதாபமும், சமரசமும் காட்டக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு வழக்கு
தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்
உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பணப்பலன் வழங்காததை எதிர்த்து ஓய்வு பெற்ற ஆசிரியர் தொடர்ந்த வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்து, 1993ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை 2017 மார்ச்சிலிருந்து அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, பண பலன்கள் வழங்கவில்லை என ஹரிஹரன் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரதசக்கரவர்த்தி அமர்வு, பணப்பலன் வழங்காதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க பள்ளிக்கல்வித் துறை ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, பள்ளிக்கல்வி துறை ஆணையர் நந்தகுமார் நேரில் ஆஜரானார். அப்போது அரசுத்தரப்பில், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஹரிஹரனுக்கு ஓய்வூதியத்தை கணக்கிட்டு வழங்குவது தொடர்பாக நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
உத்தரவு பிறப்பித்தால் மட்டும் போதாது எனத் தெரிவித்த நீதிபதிகள், பணம் எப்போது மனுதாரருக்கு வழங்கப்படும் எனக் கேள்வி எழுப்பினர். இரு வாரங்களில் பணம் மனுதாரரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், மனுதாரரை மிரட்டுவதாக அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார் தெரிவித்தார். இது தீவிரமானது எனத் தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து விசாரணை நடத்தி, குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
க்ரைம்
தொழில்நுட்பம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion