தடுப்பூசி செலுத்திக்கொண்டால் தங்க நாணயம், பைக் பரிசு!
சென்னையை அடுத்த கோவளத்தில் தன்னார்வ அமைப்புகள் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு தங்க நாணயம் முதல் இருசக்கர வாகனம் வரை இலவசமாக வழங்கி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மக்கள் கொரோனா பரவலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னைக்கு அருகில் உள்ள கோவளத்திற்கு அருகே உள்ள கிராம மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான ஆர்வத்தை அதிகரிப்பதற்காக தன்னார்வ அமைப்புகளான எஸ்.டி.எஸ். நிறுவனம், சி.என்.ராமதாஸ் சாம்பியன்ஸ் டெவலப்மெண்ட் அமைப்பு மற்றும் டான்பாஸ்கோ அலுமினி குழுவினருடன் இணைந்து ஒரு புதிய விழிப்புணர்வு முகாமை நடத்தி வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள 50 ஆயிரம் மக்களாவது தடுப்பூசி முகாமில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக அவர்கள் புதிய முறையில் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதன்படி, இந்த வட்டாரத்தில் உள்ள மக்கள் கொரோனா தடுப்பூசி மையத்திற்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அவர்களுக்கு தங்க நாணயம், பிரிட்ஜ், இரு சக்கர வாகனம் ஆகியவை பரிசாக அளிக்கப்படும். மக்கள் மத்தியில் உள்ள தடுப்பூசி பற்றி அச்ச்த்தை போக்கவும், அவர்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியை அந்த அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மக்களுக்கு தடுப்பூசி பற்றி போதுமான விழிப்புணர்வையும், தடுப்பூசி பற்றிய புரிதலையும் ஏற்படுத்தி வருகின்றனர். திரைப்பிரபலங்கள், தொலைக்காட்சி பிரபலங்கள் மூலமாக தடுப்பூசி பற்றிய விடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர். இந்த வீடியோக்களை அந்த வட்டாரத்தில் உள்ள மக்களின் வாட்ஸ் அப் எண்களுக்கு அனுப்பி, அவர்களுக்கு தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சென்னை அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த புதிய முயற்சிக்கு பல்வேறு தரப்பு மக்களும் வரவேற்பும், ஆதரவும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இதுபோன்ற பல இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : அவெஞ்சர்ஸ் `லோகி'க்கும், சென்னைக்கும் இவ்ளோ நெருக்கமா?
தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக கடந்த வாரம் 36 ஆயிரத்திற்கும் அதிகமான அளவில் பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு தற்போது 27 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. சென்னையில் கடந்த வாரம் 7 ஆயிரம என்ற உச்சத்தில் தினசரி பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், தற்போது 2 ஆயிரத்து 500 என்ற அளவில குறைந்துள்ளது.
இந்த நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ வல்லுனர்கள் உள்ளிட்ட ஆலோகர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில், இதுபோன்ற வித்தியாசமான விழிப்புணர்வு முயற்சிகள் மக்கள் மத்தியில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.