அவெஞ்சர்ஸ் `லோகி'க்கும், சென்னைக்கும் இவ்ளோ நெருக்கமா?
அவெஞ்சர்ஸ் புகழ் லோகியின் சகோதரி சென்னையில் வசிப்பதாக அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதுமட்டுமின்ற ஷாரூக் மற்றும் ஐஸ்வர்யா ராய் படங்களை பார்த்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மார்வெல் ஸ்டூடியோசின் அவெஞ்சர்ஸ் வரிசை திரைப்படங்கள் உலகப்புகழ் பெற்றவை. இவற்றில் வரும் கதாபாத்திரங்களான கேப்டன் அமெரிக்கா, அயன்மேன், தோர், ஹல்க், ப்ளாக் விடோ கதாபாத்திரங்களுக்கு என்று இந்தியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்த திரைப்படங்களில் தோர் கதாபாத்திரத்தின் அண்ணனாக `லோகி’ கதாபாத்திரத்தில் நடிப்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த டாம் ஹிட்டில்டன். இவரது மந்திரத்தனங்கள் கொண்ட வில்லன் கதாபாத்திரத்திற்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு.
இந்த நிலையில், டாம் ஹிட்டில்டன் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, `எனக்கு இந்தியாவில் குடும்பம் உள்ளது. எனது சகோதரி சென்னையில் வசித்து வருகிறார். அவர் தனக்கு சில பாலிவுட் படங்களை அறிமுகப்படுத்தினார். அதில் ஷாரூக் கான், ஐஸ்வர்யா ராய் நடித்த தேவ்தாஸ் திரைப்படமும் அடங்கும்.
நான் இதுவரை நான்கு முறை இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளேன். இறுதியாக 2011ம் ஆண்டு நான் இந்தியாவிற்கு சென்றேன். நான் அந்த இடத்தை நேசிக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதுமட்டுமின்றி டாம் ஹிட்டில்டன் தனது பேட்டியில் சென்னை மட்டுமின்றி புதுச்சேரி மற்றும் மகாபலிபுரத்திற்கு தான் சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தேவ்தாஸ் படத்தை பற்றி அவர் கூறும்போது, தனது இந்திய குடும்பம்தான் தனக்கு சில புதிய படங்களை அறிமுகப்படுத்தினர் என்றும், தனது சகோதரிதான் தேவ்தாஸ் திரைப்படத்தை தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் கூறினார். மேலும், தான் கடைசியாக விமானத்தில் சென்றபோது ஷாரூக்கானின் மை நேம் இஸ் கான் திரைப்படத்தை பா்ர்த்ததாகவும் கூறினார்.
தோரின் சகோதரனாக டாம் ஹிட்டில்டன் நடிக்கும் லோகி கதாபாத்திரம் ‘அவெஞ்சர்ஸ்- இன்பினிட்டி வார்’ படத்தில் இறப்பது போல காட்டப்பட்டிருக்கும். ஆனால், அதற்கு முந்தைய படங்களில் எல்லாம் அவர் பலமுறை தனது மாய சக்திகளால் இறப்பது போல நடித்து மீண்டும் உயிர்பிழைத்து வருவதுபோல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
இதன் அடிப்படையில், மார்வெல் ஸ்டூடியோ தற்போது `லோகி’ என்ற தனி படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்கியுள்ளது. இந்த படம் கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்த பிறகு, வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்வெல் ஸ்டூடியோவின் லோகி கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கிய பிறகு, டாம் ஹிட்டில்டன் ஹாலிவுட்டின் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வருகிறார். தற்போது திரைப்படங்கள் மட்டுமின்றி பிரபல ஹாலிவுட் படத்தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி தயாரிக்கும் வெப்சீரிஸ்களிலும் நடிக்க உள்ளார். அதற்கான பணிகள் முன்னேற்பாடாக நடைபெற்று வருகிறது.
டாம் ஹிட்டில்டன் தனக்கு சென்னையில் சகோதரி இருப்பதாகவும், இந்தியாவிற்கு நான்கு முறை வந்து சென்றுள்ளதாகவும் கூறியிருப்பது அவரது ரசிகர்களுக்கும், அவெஞ்சர்ஸ் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக உள்ளது.
மேலும் படிக்க : ''தமிழன்னு சொன்னாலே இந்த கேரக்டர்ஸ்தானா?'' - ஃபார்முலாவை மாற்றாத மலையாள சினிமாக்கள்!