Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், சென்னையில் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
ரெட் அலர்ட்டில் சென்னை:
சென்னையில் பெய்து வரும் இந்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. பல இடங்களில் மரங்கள் வேரொடு சாய்ந்து விழுந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று மழையின் தாக்கம் மேலும் தீவிரம் அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் 1 மணி வரை சென்னையில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், சென்னையின் பல பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மட்டுமின்றி, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கும் என்று கூறப்படுகிறது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூடப்பட்ட சுரங்கப்பாதை:
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் 150க்கும் மேற்பட்ட ராட்சத மோட்டார்கள் சென்னை முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி சென்னையில் உள்ள கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, ஆர்.பி.ஐ. சுரங்கப்பாதை, அஜாக்ஸ் சுரங்கப்பாதை, பெரம்பூர் சுரங்கப்பாதை, சுந்தரம் பாய்ண்ட், துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை மழைநீர் தேங்கியிருப்பதால் மூடப்பட்டுள்ளது. மற்ற சுரங்கப்பாதைகள் தற்போது வரை தண்ணீர் தேங்காமல் போக்குவரத்து சீராக இயங்கி வருகிறது.
சீறும் கடல், சூழ்ந்த மழைநீர்:
சென்னையில் காலை முதல் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. தரைக்காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீட்டர் வேகத்தில் வீசி வருகிறது. இதனால், முக்கியமான சாலைகளில் வாகன போக்குவரத்து மிகவும் மந்தமாக உள்ளது.
சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக, காசிமேடு, மெரினா, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில்களின் சேவைகளும் ஃபெஞ்சல் புயல் காரணமாக தடைப்பட்டுள்ளது. ராயபுரம், வேளச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
விமானநிலையம் மூடல்:
கனமழை காரணமாக சென்னையில் உள்ள திரையரங்குகள் இன்று மூடப்பட்டுள்ளது. மேலும், பூங்காக்களுக்கும் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வசிக்கும் மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாலை வரை விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் சென்னை விமான நிலையம் இரவு 7 மணி வரை மூடப்பட்டுள்ளது.
பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகள் சென்னையில் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று மாநகராட்சி அறிவுறுத்தியிருப்பதுடன், பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது.